women
வடக்குக்கிழக்கின் பெண் தலைமைத்துவக்குடும்பங்கள்
by Kiyanna Staff
வைகாசி 24, 2017

Feature image courtesy:  Dilrukshi Handunnetti/IRIN

என்னதான் பெண்களும் வேலைக்கு சென்று உழைத்தாலும் பொதுவாக தென்னாசிய நாடுகளில் குடும்பத்தலைவர் என ஆண்களைத்தான் குறிப்பிடுவது வழக்கம். சமூகத்தின் கண்களிலும் குடும்பத்தலைவர் உள்ள வீடுகளே நிறைவானவையாக கருதப்படுவது சில கலாச்சாரங்களில் இருந்து வருவதை மறுக்க முடியாது. கணவர் இறந்து போனாலோ, விவாகரத்தானாலோ இல்லையேல் வேறு சில காரணங்களுக்காக குடும்பப்பொறுப்பை சுமக்கும் பெண்கள் சந்திக்க வேண்டிய சவால்களை பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், சட்ட ரீதியில் என வகைப்படுத்திக்கொண்டே செல்லலாம்.இலங்கை பல இனங்களை, பல கலாச்சாரங்களை பின்பற்றும் மக்களைக்கொண்ட நாடு. ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழும் மக்களையும் அந்த பிரதேசத்தின் வாழ்வியல் முறைகளையும் பொறுத்து இப்பெண் தலைமைத்துக்குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வேறுபடும். அவ்வகையில் வடக்குக்கிழக்கை எடுத்துக்கொண்டோமானால் போரின் பிடியில் சிக்கியிருந்தது அதற்கு தனித்துவமான ஒரு இயல்பை அளிக்கிறது. மற்ற எல்லா மாவட்டங்களையும் விட பெண் தலைமைத்துவக்குடும்பங்களில் தனித்துவமான ஒரு சாரார் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

“நிச்சயமின்மையுடன் வாழுதல்: காணாமற்போனோரின் குடும்பங்களின் தேவைகளை ஆராய்தல்” என்ற தலைப்பில் 2016 ஆம் ஆண்டு ICRC வெளியீட்டின் படி இலங்கையில் மொத்தமாக 16௦௦௦ பேர் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை வடக்கு கிழக்கிலேயே மிக அதிகம். அந்த ஆய்வறிக்கைப்படி 93% குடும்பங்களில் ஆண்களே காணாமல் போயிருப்பதால் பெண்கள் குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இல்லையேல் உறவினர் ஆண்களில் குடும்பத்தோடு தங்கிவாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆய்வறிக்கை மூலம்

தங்களது கணவரோ, தந்தையோ சகோதரனோ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத நிலை அப்பெண்களுக்கு உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உளவள ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் என்பன தற்போது அவர்களின் முக்கியமான தேவைகளாகும்.

வாழ்வாதாரம் போரினால் அழிக்கப்பட்ட நிலையில் அங்கே பெரும்பாலான குடும்பங்கள் பூச்சியத்தில் இருந்தே மீளத்தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே வெறுமனே நிதி உதவி செய்வதற்கு பதிலாக பின்னணியை ஆராய்ந்து அப்பெண்களுக்கு வாழ்வாதார வழிகாட்டல்களும் பயிற்சிகளும் வழங்கப்படுவதோடு மூலதன உதவிகளும் வழங்கப்படவேண்டும்.

இப்பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாமையே. பெரும்பாலான குடும்பங்களில் சொத்துக்கள், வங்கிக்கணக்குகள் எல்லாமே காணாமல் போன ஆணின் பெயரிலேயே இருக்கின்றன. இலங்கை சட்டங்கள் காணாமல் போனவரை இறந்தவராக அங்கீகரிப்பதில்லை. ஆகவே அந்த சொத்துக்களை விற்கவோ அடகு வைக்கவோ, அன்பளிப்பு செய்யவோ, வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளவோ, கணக்கை மூடவோ எதுவுமே இப்பெண்களால் செய்ய முடிவதில்லை. அவ்வாணின் ஊதியம், ஊழியர் சேமலாப நிதி எல்லாவற்றுக்குமே இதே நிலைமை தான்.

அந்தக்குடும்பங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோரும் தங்கள் காணாமல் போன உறவுகளுக்கு மரண சான்றிதழை பெற விரும்புவதில்லை. சட்ட ரீதியான அங்கீகாரம் உடைய, காணாமல் போனதற்கான அரசு சான்றிதழ் ஒன்றையே அவர்கள் விரும்புகிறார்கள்.

நாட்டின் கொள்கை வடிவமைப்பாளர்களும். பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் பிற பங்காளர்களும் இப்பிரச்சனையை நன்கு ஆராய்ந்து பொருத்தமான ஒரு தீர்வை கொள்கை வடிவமைப்பின் மூலம் கால தாமதமின்றி வழங்குதலே அந்த குடும்பங்களை வலுப்படுத்த செய்யவேண்டிய முக்கியமான கடமை ஆகும்.

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS