youth
நமக்கு நாமே: நெலுவவில் இருந்து ஒரு சாதனைக்கதை
by Kiyanna Staff
சித்திரை 18, 2017

முகப்புத்தகத்தில் உலவும் போது ஒருநாளைக்கு சராசரியாக ஒரு பெண்ணியப்பதிவாவது நாம் பார்த்து விடுகின்றோம். பெண்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி சாதிக்க வேண்டும் என்று உணர்ச்சி பூர்வமாக அறைகூவல் விடுக்கும் பதிவுகள் பல சமயங்களில் அலுப்பை வரவழைப்பதும் உண்டு. ஆனால் நம்மிடையே பெண்ணியம், சமூக மாற்றம் போன்ற பெரும் சொற்களை அறியாமல் சத்தமே இல்லாமல் பெரும் சாதனைகளை புரிந்து வரும் இளைஞர் சமுதாயமும் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணமானது தான் இந்த டில்க்கியின் கதை.

நிலூஷிகா, டில்கி, லாஹிருக்கா
நிலூஷிகா, டில்கி, லாஹிருக்கா (இடமிருந்து வலமாக)

தென் மாவட்டமான காலியின் ஒரு பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த 21வயதுப்பெண் தான் டில்கி. அடுத்திருக்கும் குட்டி நகரத்துக்கு பல வித தேவைகளுக்காக அவர்கள் சென்று வர அவர்களுக்கிருந்த ஒரே மார்க்கம் மூன்று உருளை மரங்களை வெறுமனே குறுக்காக போட்டிருந்த அந்த பாலம் தான்.அவளின் சிறுவயதில் இருந்து அந்தப்பயணம் வெகு சாதாரணமானதாக  அவர்களுக்கு பழகிப்போயிருந்தது. அந்த சோக சம்பவம் நடக்கும் வரை!

டில்கியின் பதின் மூன்றாவது வயதில் அவளுடைய தந்தையார் அப்பாலத்தை கடக்க முயன்றபோது துரதிஷ்டவசமாக கீழே விழுந்து உயிரிழந்து விட்டார். டில்கி வளர வளர இந்த காயமும் ஆறாத ரணமாக அவளுக்குள் வளர்ந்து கொண்டே போனது. ஆனால் எந்த தரப்பாலும் அப்பாலத்தை முறையாக கட்ட எந்த முயற்சியுமே எடுக்கப்படவில்லை.

வெறும் மரக்குற்றிகளாலான இப்பாலமே இவ்வளவு நாளும் நாளாந்த பாவனையில் இருந்து வந்தது!
வெறும் மரக்குற்றிகளாலான இப்பாலமே இவ்வளவு நாளும் நாளாந்த பாவனையில் இருந்து வந்தது!

2016 ஆம் ஆண்டு “Youth got talent” என்ற தேசிய போட்டியில் அப்பாலத்தை கட்டுவதற்கான முன்மொழிவோடு டில்கியும் அவளது நண்பர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு வெற்றியும் பெற்றனர். ஒரே ஒரு குறை என்னவெனில் அவர்களுக்கு பரிசுப்பணம் போதவில்லை!

எத்தனையோ கருத்துக்கள், அவளது ஊருக்குள்ளேயே இருந்து அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சின்னப்பெண்களால் இப்படியொரு பெரிய விடயத்தை சாதிக்க முடியாது போன்ற எதிர்மறைக்கருத்துக்கள் அவர்களின் முயற்சியை மனதளவில் பாதித்தாலும் அவர்கள் மனம் தளரவில்லை

குறிப்பாக நிலூஷிகா, லாஹிருகா ஆகிய 20, 19 வயதான டில்கியின் தோழிகள் அவளோடு கை கோர்த்து பாலம் கட்டி முடித்தாக வேண்டும் என்ற அவளது உறுதிக்கு துணை நின்றனர். அவர்கள் மூவரும் சேர்ந்து உள்ளூர் அரசியல்வாதிகள், அரசாங்க அலுவலர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.

“சில்வர் ஸ்டார்ஸ்” இளைஞர் கழகத்தின் தலைவி என்ற ரீதியில் டில்கி அங்கத்தவர்கள் ஊர்மக்களிடம் நிதி சேகரிக்கும் முயற்சியையும் ஆரம்பித்தாள்.

அவற்றின் பலனோ எதிர்பாராத விதமாக இருந்தது. அவர்களுடைய ஒட்டுமொத்த சமூகமும் அவர்களுக்கு உதவ முன்வந்தது. பணமாகவோ, பாலம் கட்டும் வேலைக்கு உரிய பொருட்களாகவோ, கட்டுமான தொழிலாளர்களாகவோ, தொழிநுட்ப உதவியாகவோ அவ்வூர் மக்களும் அரசாங்க அலுவலர்களும் டில்கியின் கனவை நனவாக்க உறுதுணையாகினர்.

பாலத்தின் கட்டுமானப்பணிகளின் போது..
பாலத்தின் கட்டுமானப்பணிகளின் போது..

1-HzLYga5NzY4yQM6zHtePPA 1-N23UXy7PQNgSZ3EHA3V10Q

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிர்வாகி திரு. தீபால கருத்து தெரிவிக்கும் போது இவர்களை போன்ற இளைஞர்களின் வெற்றி மற்ற இளைஞர்களையும் அவர்களின் இலக்கை சென்றடைய உதவி புரியும் என்றும் இந்த சாதனை இளைஞர்கள் எம் ஊரில் இருந்து வந்தது எங்களுக்கு மிகவும் பெருமையான விடயம் என்றும் தெரிவித்தார்.

1-v2wUoVsFKtXIrWgSTUOsjg
திரு. தீபால, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்

ஒரு ஊரில் இளைஞர்கள் தமக்குத்தேவையான ஒரு பாலத்தை தாமே முன்னின்று அமைத்துக்கொண்டது ஒரு சிறிய முயற்சிதான் ஆனால் அது இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு மிகவும் தேவையான மாற்றமாகும். கொள்கை நிலையில் இருந்து ஆரம்பித்து சின்ன சின்ன முடிவுகள் எடுப்பது வரை இளைஞர்களை முடிவெடுத்தலில் இணைத்துக்கொள்ளாமை அபிவிருத்திக்கும் இளைஞர்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இலங்கையின் 23.2% ஆன சனத்தொகை 15-29 வரையான வயதுப்பிரிவினரைக்கொண்டது. ஆகவே கிட்டத்தட்ட கால்வாசிக்குடித்தொகையில் இருக்கும் இளைஞர்களை அபிவிருத்திக்கான பாலங்களாக மாற்றிக்கொள்ளுதல் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். டில்கியை போல இன்னொருவர் வந்து செய்து கொடுக்க வேண்டும் என்று காத்திருக்காமல் இது என் தேவை நானே செய்து முடிக்க வேண்டும் என்று இளைஞர்கள் களத்தில் இறங்கினால் நாட்டில் மாபெரும் முன்னேற்றம் சாத்தியப்படும்.

1-Dqk4Du5FouBpy6alkR4cdg
பாலத்தின் கட்டுமானப்பணிகளில் பங்குகொண்ட மக்கள் டில்கியுடன்
1-7nUqqrPX6BYdwrJZd8KmAw
வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்ட பாலம்

1-RDQoyZA03Auxkc6ErMcfTw

 

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS