youth
வலைப்பந்தாட்டத்தாரகை
by Kiyanna Staff
பங்குனி 16, 2017

வலைப்பந்தாட்டத்தாரகை செல்வி தர்ஜினி சிவலிங்கத்தை சந்தித்து பேசவேண்டும் என்று கேட்டிருந்த எங்களுக்கு ஒரு வியாழனன்று  காலை வருமாறு பதில் அனுப்பியிருந்தார் அவர்.  காலை எட்டுமணிக்கு வேலைக்குப்போகும் பரபரப்பில் இருப்பவர் எங்களோடு பொறுமையாக பேசுவாரா என்ற எங்கள் சந்தேகம் பளிச்சென்ற புன்னகையோடு வங்கிச்சீருடையில் வந்து கதவை திறந்து எம்மை வரவேற்ற  தர்ஜினியின்  முகத்தை பார்த்ததுமே மறைந்து போனது. இனிமையான சிரிப்பு, தீர்க்கமான பேச்சு, வெளிப்படையான அபிப்பிராயங்கள் ஆழமான, தொலைநோக்கிலான எண்ணங்கள் என அவரோடு பேசிய அந்த ஒருமணி நேரமும் எம்மை ஆச்சர்யப்படுத்தியபடியே இருந்தார் தர்ஜினி.

செல்வி தர்ஜினி சிவலிங்கம்

கடந்த பத்து ஆண்டுகளாய் , ஆறடி ஒன்பது அங்குலத்தில் உலகிலேயே உயரமான  வலைப்பந்தாட்ட வீராங்கனையாக, இலங்கையின் வலைப்பந்தாட்ட தேசிய அணியில் தர்ஜினியின் ஆக்ரோஷமான விளையாட்டு தொடர்ந்து வந்திருக்கிறது. அவர் ஒரு தமிழ்ப் பெண், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து சாதித்தவர்  என்று சொல்லிக்கொள்வதில் தமிழர்களுக்கு ஒரு குட்டிப்பெருமை!

2009 ஆம் ஆண்டு இலங்கை வலைப்பந்தாட்டதுக்கான ஆசியாக்கிண்ணத்தை  கைப்பற்றியபோது பெரும் தூணாக இருந்ததுடன் 2009 ஆம் ஆண்டு ஆசியாவின் சிறந்த ஷூட்டராக தரவரிசைப்படுத்தப்பட்டார். அதே ஆக்ரோஷம் தொடர்ந்ததில் அவரையும், எங்களையும் ஒருசேரப்பெருமைப்படுத்திய உலகின் சிறந்த ஷூட்டர் அடையாளம் 2011 ஆம்  ஆண்டில் தர்ஜினியை கௌரவப்படுத்தியது. தன்னுடைய கோல் போடும் வீதத்தை 100 வீதமாக கொண்டுவந்தமை, பங்குபற்றிய போட்டிகளிலெல்லாம் சிறந்த ஷூட்டர் அடையாளம் என பற்பல  பெருமைகளை தன்வசப்படுத்திய  இந்த வலைப்பந்துத்தாரகையின் ஆரம்ப காலம் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு உதாரணப்பாடமே!

யாழ்ப்பாணத்தின் சனநெருக்கமோ, கட்டிடநெருக்கங்களோ அற்ற ஒரு பின்தங்கிய பிரதேசமான ஈவினையில்  நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் பிறந்த தர்ஜினி வயாவிளான் மத்திய கல்லூரியில் தனது பாடசாலைக்கல்வியை  முடித்திருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் அவரது அசாதாரண உயரமே அவருக்கு பெரும் துயரமாக அமைந்து விட்டிருந்தது. மினிபஸ்களில்  பயணம் செய்யும் சிரமம், தெருக்களில் தோற்றம் குறித்த கேலி கிண்டல்கள், தன்னைக்குறித்த பெற்றோரின் வருத்தம் என தர்ஜினி அனுபவித்த வலிகள் மிக அதிகம். இருந்தாலும் பெற்றோரும் நல்ல நண்பர்களும் அவருக்கு வாய்த்ததினால் கல்வியில் இருந்து கவனம் சிதறவில்லை அவருக்கு. அப்போதே விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தாலும் பாடசாலை மட்ட போட்டிகளில் பங்கு பற்றி இருந்தாலும் அப்போதிருந்த போர்க்காலச்சூழல், வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்ய முடியாத தடைகள் போன்றவற்றால் அந்த ஆர்வம் அடுத்தகட்டத்துக்கு செல்லவே இல்லை.

உயர்தரப்பரீட்சையை அடுத்து மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிறார் தர்ஜினி. அங்கேயும் பொருளாதாரத்துறையை சிறப்புப்பிரிவாக எடுத்து படிக்கிறார். அப்போதுதான் வவுனியாவில் நடைபெற்ற ஒரு திறந்த வலைப்பந்தாட்டப்போட்டிக்கு மட்டக்களப்பு சார்பாக விளையாட அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அந்தப்போட்டிக்கு இலங்கை வலைப்பந்தாட்ட பெடரேஷன் ஒழுங்கமைப்பாளர்களும், முன்னாள் தேசிய அணி  வீரர்களும், பயிற்சியாளரும் வந்திருக்க, அவர்களின் கருத்தில் படுகிறார் தர்ஜினி. 2005 ஆம் ஆண்டு இலங்கை தேசிய அணியில் இப்படித்தான் அவர் இடம்பிடித்தார்.

“பல்கலைக்கழகம் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. கொழும்பில் பயிற்சி பெற்றாக வேண்டிய எனது நிலையை கருத்தில் கொண்டு வருகைக்கான இறுக்கங்களை எனக்காக  தளர்த்தி பரீட்சைகளை மட்டும் எழுத அவர்கள் அனுமதித்ததினாலேயே என்னால் உயர்கல்வியையும் சரியான நேரத்தில் முடித்து தேசிய அணியில் விளையாடவும் முடிந்தது. இந்த சந்தர்ப்பத்தில் பலகலைக்கழக நிர்வாகத்தோடு, என்னுடைய பயிற்சியாளர் திலகா ஜினசேன, மற்றும் எனது சித்தப்பாவை நான் நன்றியோடு நினைவு கூருகிறேன்.”

தேசிய அணியில் உங்கள் ஆரம்ப நாட்களை பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டோம்.

“ஆரம்ப நாட்கள் எனக்கு சற்றே சிரமமானவை தான். கொழும்பில் ஹாஸ்டலில் தங்கி  பயிற்சிகளுக்கு செல்ல, கொழும்பின் செலவு மிகு வாழ்க்கை முறையில் தாக்குப்பிடிக்க, சற்று சிரமப்பட்டுத்தான் போனேன். அதை விட மொழி பெரும் பிரச்சனையாக இருந்தது. அணியில் ஒற்றைத்தமிழ் பெண்ணாக நான் இருந்ததினால் மற்றவர்களுடன் பேசிப்பழக மொழி பெரும் தடையாக இருந்தது. படிப்படியாகத்தான் நான் கற்றுக்கொண்டேன். அதைவிட வலைப்பந்தாட்டத்தில் அணியவேண்டிய ஆடைகள் ஆரம்ப காலத்தில் பெரும்  சங்கடதைக்கொடுத்தன. நான் அணியும் ஆடைகள் குறித்து எம் சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் இருந்தது. வெளிநாட்டுப்பயணங்கள் மேற்கொள்ளும் போது நான் பிரபலமடைந்திராத ஆரம்ப காலத்தில் பொருளாதார ஆதரவாளர்களை கண்டுபிடிப்பதே பெரும்சிரமமான காரியம். 2005 காலப்பகுதி போர் தீவிரமான காலப்பகுதி வேறு, சிரமமான பயணங்கள், பாதைகள் மூடப்பட்ட நிலை என்று அது தனிப்பிரச்சனை. இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி நான் இங்கே நிற்பதற்கு  விளையாட்டு மீது எனக்கிருந்த காதலும் நாட்டுக்காக விளையாடுவதில் இருந்த ஆர்வமும் எனக்குக்கிடைத்த சிங்கள, தமிழ் நண்பர்களும், பெற்றோர் உறவினர்கள், ஊர்மக்களின் உற்சாகமும்  ஆதரவும் என்று தான் சொல்வேன்”

சரி இப்போது நீங்கள் ஒரு வலைப்பந்தாட்டதாரகை, உலகளவில் பெயர், புகழ் பெற்ற பிரபலமாக நிறைய சாதித்தாயிற்று. உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்று ஏதாவது உண்டா?

கண்களை சுருக்கி யோசித்தவர் பிறகு  புன்னகைக்கிறார்.  “எனக்கு முன்னர்  தமிழில் மேற்படிப்பு முடித்து ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது தேசிய அணியில் ஒரே தமிழ்ப்பெண்ணாக இருப்பதுடன் கொழும்பில் வங்கியில் வேலைபார்த்தலும் எனக்கு தமிழ்ச்சூழல் தொடர்பான குட்டி ஏக்கத்தையே ஏற்படுத்தி விட்டன என்று தான் சொல்லவேண்டும். ”

பின்தங்கிய பிரதேசங்களில் பிறந்து வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அனுபவங்கள் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு தீவிரமான முகபாவத்தோடு பேசத்தொடங்குகிறார் தர்ஜினி.

“சோதனைகளும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதற்காக சாதிக்க நினைக்கும் நாங்கள் பின்வாங்கக்கூடாது. சின்னச்சின்னதாய் ஒவ்வொரு வருடமும் உங்களுக்கென  இலக்குகளை நியமித்துக்கொள்ளுங்கள். நான் அப்படித்தான் செய்வேன். வலைப்பந்தாட்டத்தில் ஆசியாவின் சிறந்த ஷூட்டர் ஆகவேண்டும் என்று போராடினேன். 2009 இல் அது நனவாகியது. அடுத்து உலகின் சிறந்த ஷூட்டர் என்ற அடையாளத்தை குறி வைத்தேன். அதுவும் 2011 இல் எனக்கு கிடைத்தது. அடுத்து இலங்கை தேசிய  அணியினை  தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும் என்று செய்தேன். இப்படி வாழ்க்கையில் நம்மை நாமே வென்று கொண்டு  போய்க்கொண்டே இருக்கவேண்டும். என்னை பொறுத்தவரை அதுதான் வெற்றியின் தாராகமந்திரம். மனதை குழம்ப விடக்கூடாது. 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  எங்கள் உறவுகள் பூநகரியில் இறுதிப்போரில் மாட்டிக்கொண்டார்கள். அப்போது எனக்கு மனரீதியாக நிறைய குழப்பங்கள் ஆனாலும் இரண்டையும் சரியாகக்கையாண்டு அந்த கட்டத்தை நான் தாண்டினேன். தமிழ் மாணவர்கள் அதிகமாக சொல்லும் குற்றச்சாட்டு தேசியமட்டப்போட்டிகளில் தமிழ் என்று பேதம் பார்க்கிறார்கள் என்பதுதான். உங்கள் கடும் உழைப்பை தொடர்ச்சியாக கொடுத்து தவிர்க்க முடியாத போட்டியாளராக ஆவதை விடுத்து  இதையே காரணம் சொல்லிக்கொண்டிருப்பதால் உங்களுக்காக காலம் கொடுத்த சந்தர்ப்பங்கள் தான் வீணாகும். தடைகள் வரத்தான் செய்யும், தாண்டிசெல்லுங்கள் என்பதுதான்  நான் சொல்லக்கூடியது!

நீங்கள் இலங்கை அணிக்காக இப்போதைக்கு விளையாடுவதாயில்லை என்று ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருந்தீர்களே?

ஆமாம். இப்போதிருக்கும் நிர்வாகம் வீராங்கனைகளுக்கு மதிப்பளிப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் தேசிய அணியை கையாளும் விதத்தினாலேயே என்னைப்போன்ற பல மூத்த வீராங்கனைகள் அணியை விட்டு தள்ளி நிற்கிறார்கள். இப்போதைய அணியில் திறமையான இளம் வீராங்கனைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களை முகாமை செய்து சரியாக நிர்வகித்தால் மட்டுமே அணியை வெற்றிப்பாதைக்கு மீண்டும் கொண்டு செல்ல முடியும். அணியின் நிர்வாகத்துக்கு இளரத்தம் பாய்ச்சப்படவேண்டும் என நான் தீவிரமாக நம்புகிறேன்

இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

செலான் வங்கியில் பணி புரியும் அதே வேளை அந்த வங்கியின் அணிக்காக வலைபந்தாட்டம் ஆடி வருகிறேன். அவ்வப்போது வெளிநாட்டு அணிகளுக்காகவும் விளையாடுவதுண்டு.

வலைப்பந்தாட்டதை ஊக்குவிக்க அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்கிறீர்கள்.

“நிறைய செய்யவேண்டி இருக்கிறது” என்று புன்னகையோடு தொடர்கிறார் தர்ஜினி. “தேசிய அணியில் விளையாட எங்களுக்கு எந்தவிதமான கொடுப்பனவும் வழங்கப்பட்டது இல்லை. நாட்டுக்காக விளையாடி வெல்லும் உத்வேகத்துக்காக மட்டுமே நாங்கள் விளையாடினோம். இனிவரும் தலைமுறை நிச்சயமாக அப்படி இருக்காது. நாங்கள் இதில் செலவு செய்யும் காலத்துக்கு எங்களுக்கு கிடைக்கப்போவது என்ன?’ என்று பல இளம் வீராங்கனைகள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பதிலும் தவறில்லை. கொழும்பில் தங்கியிருந்து பயிற்சி பெற்று அணிக்காக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று அவர்களிடம் எதிர்பார்க்கும் போது அவர்களுக்கு சிறு உதவித்தொகை/ தங்குமிட வசதிகள்  வழங்குவது தவறில்லையே. கிரிக்கெட்டுக்கு  கொடுக்கும் கவனத்தில் சிறிய பங்கையாவது வலைப்பந்தாட்டதுக்கும் கொடுத்தால் நல்லது!

இப்படி தீர்க்கமான சிந்தனையும் வெளிப்படையான பேச்சுமாய் இருக்கும் தர்ஜினிக்குள் எதிர்காலம் குறித்த திட்டங்கள் என்ன இருக்கின்றன  என்று கொஞ்சம் துருவினோம். வலைப்பந்தாட்டம் தொடர்பாக ஏதேனும் மேற்படிப்பு முடித்து வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொன்னார். ஏன் வெளிநாட்டை தீர்மானித்தீர்கள் என்று கேட்டபோது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் எந்தவகையிலேனும் சாதிக்கும் ஆசையுள்ள பிள்ளைகளுக்கு உதவும் ஆசை நிறைய இருப்பதாகவும் அதற்கு இலங்கையில் உழைத்து ஈடுகொடுக்க முடியாது என்று நியாயமான எண்ணத்தை பகிர்ந்தவர் எந்த வகையிலேனும் தமிழ் சிறுவர்களுக்கு உதவி செய்தாக வேண்டும், எனக்கு நிறையபேர் பொருளாதார ஆதரவு வழங்கினார்கள் அதைப்போல சாதிக்கும் ஆசையுள்ள இளைஞர்களுக்கு நானும் உதவவேண்டும் என்ற தன் ஏக்கத்தை சொன்னார்.

உங்கள் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் தர்ஜினி. முன்னேற நினைக்கும் இளைய சமுதாயத்துக்கு இப்போது உதாரணமாக இருப்பதைப்போலவே எதிர்காலத்தில் உறுதுணையாகவும் இருப்பீர்கள் என்று வாழ்த்தி விட்டு இறுதியாக ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுவிட்டு முடித்துக்கொண்டோம்.

“இப்போது உங்கள் உயரத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இப்போதும் பார்வைகள் உங்களை தொடரத்தானே செய்யும்?”

இப்போதும் மக்கள் என்னை அதிசயமாய் பார்க்கத்தான் செய்கிறார்கள் ஆனால் என்மனதுக்கு நான் சாதித்த சாதனைகள் தெரியும். தன்னம்பிக்கை மலையளவு வளர்ந்திருக்கிறது. பத்தாண்டுகள் விளையாட்டு சூழலில் இருந்தது எதையும் இலகுவாக எடுக்கும் மனப்பாங்கை எனக்குக் கொடுத்திருக்கிறது. எல்லாவற்றிலும் பார்க்கும் மக்களில் பலருக்கு என்னை இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தர்ஜினியாகத்தான் தெரிந்திருக்கிறது. அதையே என் மிகப்பெரும் வெற்றியாக நினைக்கிறேன்.” என்று சொல்லி புன்னகைத்த  தர்ஜினியின் எதிர்காலமும் பிரகாசமாக அமைய எம் வாழ்த்துக்கள்.

நன்றி செல்வி தர்ஜினி சிவலிங்கம்

(புகைப்படங்கள் தர்ஜினி சிவலிங்கத்தின் அனுமதியோடு அவரது முகப்புத்தகப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டன)

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS