women
தைரியமே சிறகெனக்கொண்டு..
by Kiyanna Staff
பங்குனி 16, 2017

“ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமென்பதை நிரூபிப்பது போல பெண்கள் இல்லாத்துறைகள் இல்லையென்று ஆகிக்கொண்டிருக்கிறது” என்பது போன்ற வசனங்களை நாம் அடிக்கடி பட்டிமன்றங்களில் கேட்பதுண்டு. வானில் பறக்கும் விமானத்தை ஓட்டுவதில் இருந்து விண்வெளிக்கு செல்வது வரை பெண்கள் முன்னேறி க்கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அனால் உலகளாவிய ரீதியில் தான் தகவல்கள் அப்படியிருக்கிறதே தவிர எம்மை சுற்றியுள்ள பெண்கள், பெண்கள் செய்யக்கூடிய தொழில்கள் என்ற பொதுவான கருத்தியலை உடைத்து ஏதேனும் மாறுபட்ட தொழில்துறைகளில் சாதித்து வருகிறார்களா? விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றிருந்த அந்த சிறு கூட்டத்தில் நாம் தேடிப்பிடித்தவர்தான் யாழ்ப்பாணம் மீனாக்ஷி அம்மன் கோவிலடியை சேர்ந்த திருமதி கோமளேஸ்வரி செல்வக்குமார். இவர் அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? யாழ் மாவட்டத்தின் இரண்டே இரண்டு பெண் ஆட்டோ ஓட்டுனர்களில் அவரும் ஒருவர். அவரின் ஒவ்வொரு வசனத்திலும் தன்னம்பிக்கை மிளிர்கிறது.

உங்களைப்பற்றி சொல்லுங்களேன்?

“என் பெயர் கோமளேஸ்வரி செல்வகுமார். 46 வயதாகிறது. கூலித்தொழிலாளியான கணவர் நான்கு குழந்தைகள், கணவரின் தம்பியின் ஒரு பிள்ளை என்று ஏழு பேர்களைக்கொண்ட பெரிய குடும்பம் என்னுடையது.”

ஆட்டோ என்பது எப்படி உங்கள் வாழ்க்கையில் வந்தது?

“நான் ஆட்டோ ஓட்டுனராக தொழில் தொடங்கி ஐந்து வருடங்கள் ஆகின்றன. இதற்கு முன்னே தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி  புரிந்தேன். அப்போது கணவரினதும் எனதும் வருமானம் எங்கள் பெரிய குடும்பத்தின் தேவைகளுக்கு போதுமானதாய் இருக்கவில்லை. நான் பல்வேறு கிராமிய மற்றும் பெண்கள் அமைப்புக்களில் துடிப்பான அங்கத்தினராக இருப்பேன். அந்த அமைப்புக்கள் மூலமான உதவியுடன் சில பல தொழில்வாய்ப்புக்களை முயற்சித்துப்பார்த்தேன். கோழி வளர்ப்புக்கூட செய்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் பெரிய லாபம் தருவனவாகவும் நீடித்து நிலைக்கும் வருமானம் தருபவையாகவும் அமையவில்லை. அப்போதுதான் ஒரு நிறுவனத்தின் மூலம் ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி பெறும் வாய்ப்பு வந்தது. பத்துப்பெண்கள் பயிற்சி பெற்று ஆட்டோவும் லீசிங் முறையில் வாங்கினோம். இறுதியில் இன்று யாழ்மாவட்டத்தில் இருவர் மட்டுமே பெண் ஆட்டோ சாரதிகளாக இருந்து வருகிறோம்.”

நீங்கள் ஆட்டோ ஓட்டுனராகப்போகிறேன் என்று சொன்னபோது உங்கள் குடும்பத்தினரின் வரவேற்பு எப்படி இருந்தது?

“அதிர்ஷ்டவசமாக எனக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருந்தது. என் அப்பாவும் சகோதரரும் சாரதிகளாக இருந்ததாலேயோ என்னவோ எனக்கு எந்த தடையும் நேரவில்லை . தம்பி என்னை உற்சாகப்படுத்திய அதேவேளை குழந்தைகளை கணவரின் சகோதரிகள் பார்த்துக்கொள்ள முன்வந்தார்கள். இப்படியாக என் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்ததாலேயே என்னால் இந்த துறையில் தைரியமாக இறங்க முடிந்தது என்று நினைக்கிறேன். உறவினர்கள், தெரிந்தவர்கள் “ஒரு பெண் தனியாக ஆட்டோ ஓட்டுவதா?” என்று கேட்கத்தான் செய்தார்கள். நான் தைரியமாக இருந்ததுடன் என் முடிவில் இருந்து கொஞ்சமும் பின் வாங்கவில்லை.”

முதன் முதலில் நீங்கள் பயணத்தை ஆரம்பித்த பொது எப்படி உணர்ந்தீர்கள்?

“அன்றைய தினத்தை மறக்கவே இயலாது. என்னதான் தைரியமாக புறப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள தரிப்பிடத்தில் ஆட்டோவை நிறுத்திவைக்க  வேண்டி ஏற்பட்ட போது உள்ளூர ஒரே அச்சம் தான். மக்கள் வேறு எங்களை வேற்றுக்கிரக வாசிகள் போல பார்த்துக்கொண்டே சென்றதும் எங்கள் பதட்டத்தை அதிகப்படுத்தியது. முதலில் அங்கிருந்த ஆண் ஓட்டுனர்கள் கொஞ்சம் பயந்தார்கள். “உங்களோடேயே  நாங்களும் ஆட்டோவை நிறுத்திக்கொள்கிறோம். எங்களுக்குப்பயமில்லை” என்று நாங்கள் தைரியம் சொன்னதும் அவர்களும் உதவி செய்தார்கள். அவர்களுடைய சங்கத்தில் எங்களை பதிவு செய்ய உதவியதுடன் போகும் வழியில் எங்காவது நிறுத்தி இருந்தால் கூட நின்று “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டுச்செல்வார்கள். அது எங்களுக்கு பெரும் துணையாக இருந்தது.”

எப்படியான சவாரிகளை தேர்வு செய்வீர்கள்?

“காலையில் எங்கள் வீட்டுப்பிள்ளைகளோடு மேலும் மூன்று பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வேன். பிறகு கச்சேரியில் வேலை செய்யும் பெண்மணி ஒருவரை வேலைக்கு அழைத்து செல்வேன். அதன் பிறகு காலை 9 மணிக்கு யாழ் தரிப்பிடத்துக்கு சென்றால் மதியம் 12 மணி வரை அங்கே இருப்பேன். மாலை பிள்ளைகளை  பாடசாலையில்  இருந்து அழைத்துச்சென்று விட்டு விட்டு மீண்டும் நான்கு மணிக்கு யாழ் தரிப்பிடத்துக்கு வந்தேனாகில் மாலை ஆறரை மணி வரை அங்கேயே இருப்பேன். பயணிகளில் அநேகமானோர் முதல் நாள் என்னோடு பயணம் செய்யும் போதே என் தொலைபேசி எண்ணை வாங்கிகொண்டு தேவைப்படும் போது அவர்களே அழைப்பார்கள். அப்படி அழைப்பவர்களுக்காய் சிலசமயம் இரவு எட்டுமணி வரையும் ஓடுவதும் உண்டு. இப்போதெல்லாம் இரவு ரயிலில் மக்கள் அதிகம் பயணிப்பதால் அப்படியான இரவு அழைப்புக்களும் அதிகம் வரும்.”

ஆட்டோ ஓட்டுவதில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்று எதைச்சொல்வீர்கள்?

“அலுவலகம் போகும் மக்கள், பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் பத்திரிக்கை நிருபர்கள், பலகலைக்கழக மாணவர்கள் என்று என் தொடர்பு வட்டம் பரந்து விரிந்திருக்கிறது. அவர்களுடன் பேசிக்கொண்டே பயணிப்பது பலவிஷயங்கள் குறித்த என் பார்வையும் மாற்றியிருக்கிறது. ஒரு தடவை பல்கலைக்கழகத்தின் மீடியா துறை மாணவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் பற்றிய ஏதோ ஒரு ஆய்வுக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அனுமதி அவ்வளவு சுலபமாக கிடைக்காது. நான் தான் அவர்களை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக சென்றிருந்தேன். அவர்களின் குழுவில் நானும் ஒருத்தியாகிவிட்டது போலவே உற்சாகமாக இருந்தது. இறுதியில் அக்கா உங்கள் வீட்டில் தான் நாங்கள் இரவு உணவு சாப்பிடப்போகிறோம் என்று அவர்கள் சொன்னபோது எனக்கு அவ்வளவு சந்தோஷம். அன்றைக்கு நன்றாகப்பழகிய நண்பர்கள் போலே அவர்கள் எங்கள் வீட்டில் பழகி இரவுணவை உண்டது எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தார் அனைவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.”

ஆட்டோ ஓட்டும் பொது நீங்கள் சந்தித்த பிரச்சனை எதையாவது பகிர்ந்து கொள்ள முடியுமா?

“சில வருடங்களின் முன் ஒரு சம்பவம் நடந்தது. ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து வண்டியில் ஏறினார். தங்கைகள் வழியில் நிற்பார்கள் எனவும் அவர்களை ஏற்றிக்கொண்டு வட்டுக்கோட்டைக்கு போகவேண்டும் என்று கூறினார். ஆனால் வழியில் எந்ததங்கைகளும் வரவில்லை. நானும் எதுவும் பேசாமல் அவர் சொன்னபடியே வட்டுக்கோட்டைக்கு அழைத்து சென்று ஒரு வீட்டினுள்ளே அவர் சென்றதும் வெளியே காத்திருந்தேன். அந்த வீட்டில் உள்ள நபர் இவரை கோபமாக பேசி அனுப்பியபோதுதான் எனக்குப் புரிந்தது. அவர் அன்றுதான் ஜெயிலில் இருந்து திரும்பியிருக்கிறார் என்றும்  அவரை கோபமாய் பேசிய நபர் கிராம சேவகர் என்றும்!! அங்கே அருகிலிருந்த கடைக்காரர் ஒருவரும் என்னை எச்சரித்தார் “இவர் பணம் தர மாட்டார் கவனமாக இருங்கள் “என்று. ஆனாலும் நான் அவரிடம் ஏதும் காட்டிக்கொள்ளாமல் அவர் சொன்ன இடங்களுக்கு அழைத்துச்சென்றேன். அன்று இன்னும் பலவீடுகளுக்கு சென்று விட்டு யாழ்ப்பாணம் திரும்பிச்சென்ற போது கிட்டத்தட்ட எழுநூறு ரூபா ஆகியிருந்தது. ஆனால் கடைசியில் அந்த கடைக்காரர் சொன்னது போலவே அவரிடம் பணம் இருக்கவில்லை. ஒன்றும் செய்ய இயலாமல் அன்றைய பணம் எனக்கு தொலைந்து போனது என்று நினைத்துக்கொண்டு விட்டு விட்டேன். அதை தவிர வேறேதும் பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை.

ஒரு ஆட்டோ ஓட்டுனராக உங்கள் துறையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

“தொழில் உதவி வழங்குதல் என்ற பெயரில் எல்லா பெண்களுக்குமே கோழிகளும் தையல் மெஷினும் தான் அதிகம் வழங்கப்படுகிறது. எங்களைப்போன்ற பெண்களை அடையாளம் கண்டு பயிற்சி வகுப்புக்கள் வழங்குதல், லைசன்ஸ் பெற உதவுதல் போன்ற உதவிகள் கிடைக்குமானால் மேலும் பல பெண்கள் பயனடைய முடியும். ஆட்டோ இப்போதெல்லாம் லீசிங் முறையில் தான் வாங்குகிறோம். வீட்டையும் பார்த்துக்கொண்டு தொழிலிலும் ஈடுபட வேண்டிய பெண்களுக்கு முழுக்க முழுக்க தொழிலுக்காய் நேரத்தை அர்ப்பணிப்பது கடினம். கிடைக்கும் நேரத்தில் உழைக்கும் பணத்தைக்கொண்டு குடும்பத்தையும் லீசிங்கையும் சமாளிப்பது கடினமாக இருக்கிறது. இதில் அரசாங்கம் ஏதேனும் உதவி செய்ய முடியுமாயின் அது மிகப்பெரும் உதவியே.”

ஆட்டோ ஓட்டுதல் லாபகரமான துறையா? மற்றப்பெண்கள் அந்தத்துறைக்கு வருவது பற்றி உங்கள் கருத்து  என்ன? நீங்கள்  அவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

“இது பெட்ரோல் விலையோடு பார்க்கும் போது  லாபம் கையில் நிற்கக்கூடிய துறை. அத்தோடு நிரந்தரமானதும் கூட. பெண்கள் தைரியமாக  லைசன்ஸ் பெற்றுக்கொண்டு களத்தில் இறங்கலாம். ஆர்வம் இருந்தால் பிறரின் கருத்துக்களை  காதில் போட்டுக்கொள்ளத்தேவையில்லை. இந்த தொழிலில் பெண்களின் பெரிய மூலதனம் தைரியம் மட்டுமே. இப்படி முன் வரும் பெண்களுக்கு அவர்களின் குடும்பமும் உறுதுணையாக இருக்க வேண்டும். எந்த விடயமுமே நம்பிக்கை இருந்தால் வெல்லப்படக்கூடியதே.”

வாழ்த்துக்கள்!

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS