women
காதலின் இன்னொரு பக்கம்
by Kiyanna Staff
மாசி 13, 2017

“வழக்கமான ஒரு எஸ்டேட் லயன் ஒன்றை வசிப்பிடமாக கொண்டது தான் என் குடும்பம். நான் மற்றும் இரண்டு தங்கைகள் அம்மா அப்பா அவ்வளவு பேரும் அந்த குட்டி வீட்டுக்குள் எப்படியோ பொருந்திக்கொள்வோம். உடலை வருத்தி உழைக்கும் சொற்ப வருமானத்தையும் அப்பா குடிக்கு தாரை வார்த்து விடுவதால் அம்மாவின் வருமானத்தில் மட்டுமே நானும் என் குடும்பமும் சாப்பிட்டு கல்வித்தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. எனக்கோ ஒரு பட்டதாரி ஆசிரியை ஆகி அம்மாவுக்கு தோள் கொடுத்து தங்கைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருவது கனவாகவே இருந்தது. அந்த கஷ்டத்துக்குள்ளும் நன்றாகப்படித்துக்கொண்டு தான் இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் தங்கைகள் இருவரும் குறைந்தது அடிப்படைக்கல்வியை பூரணப்படுத்த வேண்டுமாயின் நான் உயர்தரத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. யாரும் என்னிடம் எதையும் சொல்லவில்லை. ஆனால் அம்மா படும் கஷ்டத்தையும் அதிகரித்துக்கொண்டே போன கடன்களையும் பார்க்கப்பார்க்க எனக்கே புரிந்து போனது. வீட்டில் யாருடனும் பேச முடியாமல் எனக்குள்ளேயே நான் மௌனமாய் அழுது கொண்டிருந்த தருணத்தில் தான் நான் குமாரை சந்தித்தேன்.

அவர் எஸ்டேட்டை விட்டு வெளியே ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்திருந்தார். எங்களின் பழக்கம் காதலாக மாற என்னை படிக்க வைக்கும் பொறுப்பை குமார் ஏற்றுக்கொண்டார். எங்களுக்கு அதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தபோதும் நான் படிப்பை நிறுத்தி வீட்டில் இருப்பதை கற்பனை செய்தே பார்க்க முடியாததால் நானும் அம்மாவும் சம்மதித்து விட்டோம். அன்றிலிருந்து என் படிப்புத்தேவைகளை குமார் தான் பார்த்துக்கொள்வார். அம்மாவுக்கும் நான் படித்த பின் என்னை திருமணம் செய்யப்போகிறவர் தானே என்ற எண்ணம்.ஆனால் இது எதுவுமே அப்பாவுக்கு தெரியாமல் தான் நடந்தது.

ஒருநாள் அப்பாவுக்கு விஷயம் தெரிந்து விட்டது. என் பிள்ளையை படிக்க வைக்க அவன் யார் என்று கத்தியபடியே போதையில் வந்தவர் என்னை அம்மாவை குமாரை ரொம்பவுமே தரக்குறைவாக பேச ஆரம்பித்து விட்டார். அவமானத்தில் நான் எதிர்த்துப்பேசிவிட்டேன். அந்த இருளில் என்னை வீட்டுக்கு வெளியே தள்ளி அடிக்க ஆரம்பித்தார். அதற்குள் யாரோ குமாருக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும். அவர் ஓடிவந்துவிட்டார். அவரைக்கண்டதும் அப்பாவுக்கு ஆவேசம் அதிகரிக்க இரண்டு பக்கமும் சில மனிதர்கள் சேர சண்டை பெரிதானது. இறுதியில் அது நான் குமாருடன் செல்ல வேண்டிய நிலையில் வந்து நின்றது

குமாரின் பெற்றோருக்கு ஒரே வீட்டில் எங்கள் இருவரையும் திருமணம் செய்யாமல் வைத்திருக்க முடியாது என்ற பயம். ஊர் அவர்களை தவறாக பேசும் என்ற எண்ணமும் சேர அவரின் பெற்றோரும் குமார் பக்க உறவினர்களும் எங்களுக்கு திருமணம் ஒன்றே ஒரே வழி என்று முடிவு செய்தார்கள்.

கனவாய் போன என கல்வியை நினைத்து நான் அழுதேன். திருமணத்தின் பின்னும் நீ தாராளமாக படி. உன் கனவுகளை பின்தொடர் என்று குமாரும் சொன்னார். அது என்னை சமாதானப்படுத்தியது. எங்கள் திருமணமும் நடந்தது. நாங்கள் கல்வியை முன்னிலைப்படுத்தி குழந்தையை பிற் போடுவோம் என்று ஊகித்தோ என்னவோ வந்திருந்த பெண்கள் அநேகமாக எல்லாருமே கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்காதே..வருங்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிடும் என்று அறிவுரை சொன்னார்கள். நானும் ஒரு பெண் தானே..எங்கள் காதலின் பரிசுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்று பயந்து விட்டேன். ஆகவே எங்கள் இருவருக்கும் தெரிந்த அரைகுறை கருத்தடை அறிவுடன் நாங்கள் பாதுகாப்பான காலங்களில் ஒன்றிணைந்தோம். ஆனால் அடுத்த மாசமே நான் கருவுற்று பாடசாலையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு விட்டேன். என் கனவுகள் அத்தனையும் தகர்ந்து போயின. பதினேழு வயதில் ஒரு குழந்தையின் தாயாகவும், கனவுகள் கலைந்த சிறுமியாகவும் என்னால் இந்த அழுத்தத்தை தாங்கவே முடியவில்லை.

இது காஞ்சனா செல்வக்குமாரின் கதை. பதின் வயதுக்கர்ப்பத்திற்கு உடலளவிலும், மன அளவிலும் தயாராக இல்லாததால் இரண்டு பக்கமும் மருத்துவர்களை நாடவேண்டிய நிலைக்கு காஞ்சனா தள்ளப்பட்டார். பதின் வயதுக்காதலும் அவரது சூழலும் இளவயது திருமணத்தை நோக்கி தள்ளியதெனிலும் அதன் பின்னர் பதின் வயத்துக்கர்ப்பம் குறித்த அறிவு, மற்றும் கருத்தடை முறைகள் முறித்த தெளிவான அறிவு கணவன் மனைவி இருவருக்குமே தெளிவாக இல்லாதது தான் இந்த நிலைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

பொதுவாக இந்த பதின் வயதுக்கர்ப்பங்களுக்கு காரணங்கள் என்ன? UNFPA மற்றும் சுகாதார அமைச்சு, குடும்ப சுகாதார நிலையம் இணைந்து இந்த பிரச்சனையின் தன்மை, போக்கு மற்றும் மாவட்ட மட்ட வேறுபாடுகள் குறித்து ஆராய்ந்து ஒரு வெளியீட்டினை வெளியிட்டிருந்தன. அதில் பதின் வயது கர்ப்பங்களுக்கு காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பதின் வயதினரின் குறைந்த கல்வியறிவு மட்டம்

ஸ்திரமற்ற குடும்ப சூழ்நிலை

பெற்றோரின் குறைந்த கல்வியறிவு மட்டம்

தாயார் வெளிநாடுகளில் வேலை பார்த்தல்

குடும்பத்தின் தன்மை- பிரச்சனைகளை மனம் விட்டு பெற்றோரோடு பேச முடியாத இறுக்கமான குடும்பங்கள்

ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவில்லாமை

கல்வியறிவு மட்ட அதிகரிப்பும் பொருளாதார வளமையும் பதின்வயது கர்ப்பங்களை எதிர்மறையாக பாதிப்பதை அவ்வாய்வு தெளிவுபடுத்துகிறது. பதின்வயது கர்ப்பிணிகளில் 37% கருத்தடை முறைகள் குறித்த புரிதல் இல்லாமையை காரணமாக கூறியமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழர்களிடையே அதுவும் கிழக்கு மாகாணத்திலேயே பதின் வயதுக்கார்ப்பமாதல் அதிகம் காணப்படுகிறது.

இந்தப்பிரச்சனைக்கு முன் வைக்கப்பட்ட தீர்வுகள் என்னென்ன?

இளமைப்பருவத்தின் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு வாழ்க்கைத்திறன் பயிற்சிகளை வழங்கி சுயமாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் வண்ணம் அவர்களை வலுப்படுத்த வேண்டும்.

பாடசாலைகள் பதின்வயது மாணவர்களை கையாளும் பொது அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பொதுச்சுகாதார தாதி தன்னுடைய கவனத்தை குடும்பங்கள் மேலும், பாதிக்கப்படக்கூடிய பதின் வயதுப்பெண்கள் இருக்கும் சூழ்நிலைகளை அடையாளம் கண்டு அவர்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இனவிருத்தி சுகாதாரமும் பாதுகாப்பும் பற்றிய முழுமையான அறிவு தயக்கமின்றி பதின் வயதினருக்கு வழங்கப்பட வேண்டும்,

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS