elderly
அதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள்
by Kiyanna Staff
தை 30, 2017
கட்டுரையாக்கம்
– ஏ.ஜே. ஞானேந்திரன்
அண்மையில் கொழும்பு வீதியொன்றை கிறிஸ்மஸ் வீதியாக சில நாட்களுக்கு முன்பு மாற்றியிருந்தார்கள். கொழும்பில் உள்ள வர்கள் நத்தார் கொண்டாட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றட்டும் என்ற உயர்ந்த நோக்ககோடு இவ்வாறு மாற்றப்பட்டது. இது ஒரு செய்தியென்றால் இப்பொழுது சொல்லப்போகும் செய்தி  சொந்த வீடின்றி வீதிகளுக்கு விரட்டப்பட்டுள்ள ஒரு சாராருக்கு இந்தக் கிறிஸ்மஸ் மட்டுமல்ல எல்லாமே வீதியில்தான் என்ற அவலநிலை வந்து சேர்ந்திருக்கின்றது.
இந்த நத்தார் மட்டுமல்ல வரப்போகும் பொங்கல், ஈஸ்டர், வெசாக், தீபாவளி என்று எல்லாப் பண்டிகைகளுமே இவர்களுக்குத் தெருவில்தான்… நடுத்தெருவுக்கு வரும் வயதாளிகள் தொகையும் முதியோர் இல்லத்திற்குள் வந்துசேருவோர் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்கின்றன புள்ளி விபரங்கள்.
சண்டே லீடரின் செய்தியின்படி இவர்களது செய்தியாளர்கள் பல வயதாளிகளை-(அதிகமானவர்கள் ஆண்கள்) தெமட்டக்கொட, வத்தளை, ராகம ஆகிய இடங்களிலுள்ள பாலங்களின் கீழே படுத்துறங்குவதை நேரில் கண்டுள்ளார்கள். தெமட்டக்கொட பாலத்தின் கீழ் வந்து சேருவோர் தொகை கடந்த சில மாதங்களில் அதிகரித்திருப்பதாக இவர்கள் கூறுகின்றார்கள். இந்தப் பாலத்தையொட்டியுள்ள கடைகளின் சொந்தக்காரர்கள் இந்த அதிகரிப்பு அச்சமூட்டுவதாக உள்ளதென
தெரிவித்துள்ளனர்.
இந்தப் பாலத்தடி அகதிகளில் ஒருவரான பந்துல சோமரட்ண என்பவர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் நான் தெருவுக்கு வந்ததே என் மருமகளால்தான் என்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நான் ஓர் அரச நிறுவன ஊழியனாகப் பணியாற்றி வந்தேன்.  நான் உழைத்ததை எல்லாம் பிள்ளைகள் நலத்திற்காக கொடுத்து வந்தேன். எனது  பெண் பிள்ளைகள் வேறிடம் சென்று விட்டார்கள்.  கடந்த சில வருடங்களாக அவர்கள் என்னுடன் மிக அரிதாகவே பேசுவதுண்டு. என்னைக் கவனித்தது என்னுடைய மகன்தான். 2016 தொடக்கம் கதை மாறிவிட்டது. எனக்கு வாய்த்த மருமகள் என்னைக் கவனிப்பதில்லை. இதைக் கவனித்த மகன் மருமகளோடு தகராறு செய்ய குடும்பம் குலையக்கூடாது என்பதற்காக நானே வெளியில் வந்துவிட்டேன். எனக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வூதியப் பயணம் எனக்குப் போதுமானது’ என்று தன் கதையைச் சொல்லி முடித்த அவர் ஓர் ஆதாரம் போல தன்னிடமிருந்த மக்கள் வங்கி சேமிப்புப் புத்தகத்தையும் காண்பித்தார். தன்னைப் போன்றவர்களைக் கவனிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தங்க ஓர் இடத்தையாவது ஒதுக்கித்தர வேண்டும் என்பது இவர் மன்றாட்டமாக இருக்கின்றது.
குடும்பத் தகராறு காரணமாகத்தான் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று கூறும் 66 வயதான லீலாவதி இது பற்றிக் குறி ப்பிடுகையில் ‘ நான் எனது மகனை நினைத்து கவலைப்படுகிறேன். என் மகன் திருமணம் செய்த இருபதுகளில் உள்ளவள்  60 வயது க்காரியைப் போல நடந்து கொள்கிறாள். அவளுக்கு இதயமே இல்லையென்று நினைக்கின்றேன். பிள்ளைகள் என்னைக் கடந்து நட ந்து செல்லும்போது என் பேரப் பிள்ளைகளை இழந்துவிட்ட மனநிலையே என்னுள் தலைதூக்குகின்றது’ என்று மனம் உடைந்த நிலையில் கூறி உளம் வெதும்புகிறார் லீலாவதி. தனது பிள்ளைகளுக்கு ஒரு தாயாக இருந்து போதிய கல்வியைக் கற்பித்து  நல்ல வாழ்விற்கு வழிகாட்டியிருப்பது மனதுக்கு மகிழ்வைத் தந்தாலும் தனது தாயின் நல்வாழ்வு கருதி ஒரு முடிவெடுக்க இவர்களிடம் மனத்திராணி இல்லையே என்று சொல்லி கவலைப்படுகிறார் இந்தத் தாய்.
வயது முதிர்ந்தவர்களுக்கு உதவுவது மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் பொறுப்பு என்பதை இலங்கையா்கள் நாம் நம்புகிறோம். ஆனால் செயற்பாட்டில் எத்தனை பேர் அதைச் செய்து வருகின்றோம்?
அதே நேரத்தில் அரசு இது சம்பந்தமாக வயதாளிகளுக்கு உதவவேண்டுமென பொதுஜனம் விரும்புகின்றது. இதற்கென பல நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப்பட்டு இருந்தபோதிலும் இவற்றை நடைமுறைப்படுத்தும் செயல்முறை அதிருப்தியைத் தருவதாகவே உள்ளதென கொழும்பு பல்கலைக்கழக மக்கள் தொகைப் பெருக்கத்திற்கான பேராசிரியர் டபிள்யு. இந்திரலால் டி சில்வா அபிப்பிராயப்ப ட்டுள்ளார்.
2012இல் இலங்கையில் வயதாளிகள் தொகை 2520573 ஆக இருந்தது. 2037இல் இத் தொகை 5118094ஆக அதிகரிக்கவுள்ளது. அதாவது 25 வருட காலத்தில் 103 வீத அதிகரிப்பை இலங்கை சந்திக்க இருக்கின்றது.
 வயது முதிர்ந்தவர்கள் அதிகரிப்பது இலங்கைக்கு மட்டுமான ஒரு விடயமும் அல்ல.  அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வருகின்ற எல்லா உலக நாடுகளிலுமே இந்த பிரச்சினை இருக்கவே செய்கின்றது. இறப்பவர்கள் தொகை அருகுவதும் பிள்ளைகள் பிறப்பது குறைவதும் ஒருவர் ஆயுட் காலம் அதிகரிப்பதும் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தி இணைநது கொள்வதும்தான் இதற்கான காரணங்கள்.
15 வயதுக்கு உட்பட்டவர்கள்  60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று பிரித்துப் பார்க்க முற்படும்போது கணிசமான அளவு வேறுபாடுகள் இரண்டு பகுதியினரிடையே இருப்பதைக் காணமுடிகின்றது. இந்தப் பேதமென்பது  ஒரு குறுகிய காலத்தில் மிக வேகமாக உருவாகும்போது (உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொள்ளலாம்) சமூக பொருளாதார நிறுவனங்களுக்கு ஏற்ப தம்மை சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்வது பெரும் சிரமமாகி விடுகி ன்றது.
வயதாளிகள் விடயத்தில் அதிகரிப்பு என்பது  ஏனைய பிரிவுகளையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி விடுகின்றது. சமுதாயத்தின் அரசியல், பொருளாதார சமூக கட்டுமானங்களையும் இந்த மாற்றம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி இருக்கின்றது.
வேறுபட்ட வயதெல்லைக்குள் வருபவர்கள் தம்மைச் சார்ந்த சமூகத்தின் மீது கொடுக்கும் அரசியல் சமூக அழுத்தங்கள் மூலவள ங்களின் விநியோகத்தை  குலைப்பதோடு இவர்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்து விடுகின்றன. நீண்ட காலம் வாழமுடிவதும் பிள்ளைகள் பிறக்கும் விகிதாசாரம் குறைவதும் நாட்டை வெகுவேகமாக  கிழடு தட்டிப் போக வைத்து விடுகி ன்றன.
இலங்கையை எடுத்துக் கொண்டால் 21ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வயதாளிகளைப் பராமரிக்க உள்ள இளம் பிராயத்தினர் தொகை வெகு குறைவாகவே இருக்கப்போகின்றது. இதையே இன்னொரு விதமாகச் சொல்வதானால் நாட்டுக்கு பொருளாதார ரீதியாக உற்பத்தியைத் தரக்கூடியவர்களைவிட நாட்டுக்கு சுமையாக இருக்கும் வயதாளிகள் தொகை அதிகமாக இருக்கப்போகி ன்றது.
இலங்கையின் சனத்தொகையின் அதிகமான பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் அதில் பெரும்பான்மையினர் பெண்களாகவும் இருக்கும் ஒரு நிலையை இலங்கை விரைவில் எதிர்பார்க்கின்றது.  இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெ ன்றால் 2001-11 காலகட்டத்தில் 80க்கும் அதற்கு மேற்பட்ட வயதினருக்குமான வருடாந்த அதிகரிப்பு அறுபதுக்கு மேற்பட்டவர்கள் எழுபதுக்கு மேற்பட்டவர்கள் கண்ட அதிகரிப்பை விட அதிகமாக இருந்துள்ளது.
வயதாளிகளாக இருக்கும்போது நல்ல ஆரோக்கியமான நிலையில் இலங்கை மக்கள் இப்பொழுது வாழ்ந்து வருவதையே இந்தப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரண விகிதம் இலங்கையில் குறைந்துவிட்டது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. 1920-22 காலகட்டத்தில் இலங்கையில் பிறந்த ஒரு ஆண்குழந்தை 30.7 ஆண்டு வரை வாழும் என்றும் பெண்குழந்தை 32.7 ஆண்டுவரை வாழும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் 2012இல் ஆணுக்கு இது 71.0 வயதாகவும் பெண்ணுக்கு 77.2ஆகவும் ஏற்றம் கண்டது. 2026இல் ஆண் 72.3 என்றும் பெண் 82.5 என்றும் மாற்றம் காணுமென  சொல்லப்படுகின்றது.
சுருங்கச் சொல்வதானால் இலங்கை மக்களின் வாழ்வுக்காலம் நீடிக்கப்படுவதால் முதியவர்கள் தொகை கிடுகிடு வளர்ச்சியைக் காணும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
வாழ்வில் எந்த பருவமும் தவிர்க்க முடியாத ஒன்று. மரணத்தால் மாத்திரம் ஒருவரது பருவத்தை இடையில் தட்டிப்பறிக்க முடியும். இந்த மரணத்தையும் கடந்து 80 வயதுவரை ஒரு இலங்கையரால் வாழமுடிகின்றது என்பது இன்றைய யதார்த்தமாகி வரும் நிலையில் மூப்பு என்பது ஆப்பு போலாகி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது திண்ணம். தேவையற்றவர்களாக பிள்ளைகளால் தெருவுக்கு துரத்தப்படும் அப்பா அம்மாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப் போவது திண்ணம்
Source
http://www.onlineuthayan.com/article/265

COMMENTS ()

Kiyanna Staff
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS