youth
சர்வதேச மனிதநேய தினம்
by admin
ஆவணி 19, 2016

தொழில்நுட்பயுகத்தின்  பிடியில் சிக்கி மற்றவரை கவனிக்க நேரமற்ற ஒரு அவசர யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் மனிதம் இன்னும் உயிர்த்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக ஆங்காங்கே நிகழ்வுகளை நாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் தான் இருக்கிறோம். இன்று ஆகஸ்ட் 19, சர்வதேச மனிதநேய தினம். ஒவ்வொரு வருடத்தையும் போலவே இந்த வருடமும் மனித நேயத்தின் அவசியத்தை ஒரு அலாரம் போல நினைவுறுத்தி கடந்து செல்கிறது

“உலக மனிதநேய தினமானது துன்பத்தில் இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கான நினைவூட்டல் மட்டுமல்லாமல் ஆபத்தின் நடுவில் இருந்து பணிபுரியும் மனிதநேய பணியாளர்களை கௌரவிக்கும் தினமாகவும் இருக்கிறது. இந்த நாளை ஆபத்தில் இறங்கி பிறருக்காய் உதவி புரியும் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்கொண்ட வெள்ளப்பெருக்கு இந்த வருடத்தின் துயரமாக மாறியிருந்தது. ஆனால் பெருமளவில் களத்தில் இறங்கிய இளைஞர்களால் நிலைமையை வேகமாகவே ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. இன மதம் பாராது நாடெங்கும் இருந்து திரண்ட உதவிகளை சேகரிக்கும் புள்ளிகளாக இளைஞர்கள் இருந்ததும் மீட்புப்பணிகளை ஒழுங்கமைத்ததும் தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்த சமூகவலைத்தளங்களை உச்சமாக பயன்படுத்தியதும் வரவேற்கத்தக்கதொரு செயலாக அமைந்திருந்தது.

 

இது மட்டுமல்லாமல் நாட்டில் பல இளைஞர் வலையமைப்புக்கள் அனர்த்த உதவி திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன்  இணைந்து தொண்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். இடர் காலங்களில் வெறுமனே அரசாங்கத்தை மட்டும் நம்பியிராமல் இளைஞர்களே களத்தில் நின்று செயலாற்றுவது நம்பிக்கைக்குரிய ஒன்றாகும்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டராக செயற்பட்டு வரும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரான சம்பத் பண்டார தன்னுடைய அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்ததாவது

“பல்கலைக்கழக மாணவர்களாக எங்கள் முக்கியமான வேலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மனிதநேய உதவிகளை வழங்குவதுடன் இடம்பெயர்ந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் தேவைகள் பற்றிய தகவல்களை தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்குவதும் ஆகும். நாங்கள் அவதானித்தவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம் வழங்குவதைப்போலவே அவர்களை பாதுகாப்பான பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதும் முக்கியமானதாகும். அனர்த்தங்களில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தற்காலிக தங்குமிடங்களில் இருக்கும் போது கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் விழுமியங்கள் காரணமாக இனவிருத்தி சுகாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான உதவிகளை பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்படுகின்றன.”

செஞ்சிலுவை சங்கத்தின் உதவி நிர்வாக அதிகாரி கேர்னல்.சுதத் மடுகல்ல கருத்து தெரிவிக்கும் போது “இலங்கை செஞ்சிலுவை சங்கம் இலங்கை முழுவதும் தன்னுடைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக இளைஞர்களை வலையமைப்பில் இணைத்து செயற்படுகிறது. அனர்த்த முகாமைத்துவம் அவர்களின் முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஒரு செயல்திட்டமாகும். எங்கள் கிளையின் அனர்த்த முகாமைத்துவ குழுவில் பெரும்பாலும் இளைஞர்களே அங்கம் வகிக்கிறார்கள். அதிகமான இளைஞர்கள் அனர்த்த தயார்நிலைக்கும் முதலுதவி நடவடிக்கைகளிலும் பயிற்றப்பட்டவர்களே”

“அனர்த்த முகாமைத்துவத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. படையினரைப்போலவே சம அளவில் இளைஞர்களான தொண்டர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்கின்றனர். அவர்களை அனர்த்த தயார்நிலைக்கும் முதலுதவியிலும் பயிற்சி கொடுத்து பயன்படுத்துதல் நீண்ட கால நோக்கில் நன்மை பயப்பதாகும்.”

சமூக நலம் நாடி தம் இளமையை பிறர்க்கு உதவியாய் கழிக்க விழையும் இத்தகைய இளைஞர்களுக்கு இன்றைய மனிதநேய தின வாழ்த்துக்கள். இவர்களை உதாரணமாய் கொண்டு இன்னுமின்னும் இளைஞர்கள் முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

 

 

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS