women
சிகரம் தொட்ட பெண்மணி
by admin
ஆவணி 11, 2016

 

“எம் சமூகத்தில் சிறுவயதில் இருந்தே ஆண்களுடைய விளையாட்டு இது, பெண்களுடைய விளையாட்டு இது என்று பிரித்து விடுவார்கள். பரிசு கொடுக்கும்போது பெண் குழந்தைகளுக்கு பொம்மையும், ஆண் குழந்தைகளுக்கு கார் மற்றும் பந்து வகைகளைத்தான் தெரிவு செய்வோம். மலையேறுதல், கடல் விளையாட்டுகள் போன்ற உடல் பலம் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை பெண்களால் சோபிக்க இயலாதவை என்றே முத்திரை குத்தி விடுகிறோம். ஆணும் பெண்ணும் சரிசமமென சாதிக்கும் இந்தக்காலத்திலும் இக்கண்ணோட்டம் மாறவேயில்லை.ஊடகங்களும் இந்நிலைக்கு ஒரு காரணம். ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் ஏன் பெண்கள் கிரிக்கட்டுக்கோ வலைப்பந்தாட்டத்துக்கோ கிடைப்பதில்லை?” என்று ஆக்ரோஷமாய் கேள்வி எழுப்பினார் இலங்கையின் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் வைத்த முதல் இலங்கையரும் முதல் பெண்மணியுமான ஜெயந்தி குரு உதும்பலா.

“இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்காய் பல அனுசரணையாளர்களை நான் அணுகியபோது நிறைய ஏமாற்றங்களை சந்தித்தேன். பலர் நான் ஒரு பெண்ணென்பதாலும், பலசாலி போன்ற உடல்வாகை கொண்டிராததாலும் என்னால் அந்த இலக்கை அடையமுடியும் என்று நம்பவில்லை. இத்தனை கஷ்டங்களை கடந்து வைராக்கியமாய் நான் எவரெஸ்டை தொட்டதற்கு இந்த நிராகரிப்புத்தான் பெரும் உந்துசக்தியாக இருந்தது. ஒரு பெண்ணுக்கு ஏன் இந்த வேலை, பெண்களால் இதெல்லாம் முடியாது என்று யாரும் சொல்லிவிடக்கூடாது, நாளை எனக்குப்பிறகு இதை முயறசிக்க விரும்பும் பெண்ணுக்கு என் தோல்வியினால் இக்கதவுகள் நிரந்தரமாக மூடிவிடக்கூடாது, நான் எப்படியாவது இலக்கை சென்று சேரவேண்டும் என்று தான் அப்போதைய என் எண்ணப்போக்கு இருந்தது”

டெல்லியில் படித்துக்கொண்டிருக்கும் போது தான் ஜெயந்திக்கு இந்த மலையேற்ற ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது. இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் முதல்கட்ட பயிற்சியில் கலந்துகொண்டவர் பிறகு மேலதிக பயிற்சியிலும் கலந்து கொண்டார். எவரெஸ்டில் ஏறுவதற்கு முழுதாக இரண்டு மாதங்களும், அதற்கு முன்னதாக ஐந்து வருட கடும் பயிற்சியும் தேவைப்பட்டிருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தை மட்டுமல்லாமல் இன்னும் பல பிரபலமான, சவாலான மலைத்தொடர்களில் ஏறியிருக்கிறார் ஜெயந்தி. தென்னாபிரிக்காவின் பார்ல் பாறைகள், ஆர்ஜென்டீனியன் அந்தீஸ் மலைத்தொடரில் உள்ள ஆர்நீல்ஸ் மெண்டோசா, ஸ்பெயினின் பிரானீஸ், பென் நெவிஸ் ஆகிய மலைகள் இவர் வெற்றிகரமாக தடம்பதித்தவைகள் ஆகும். 2011 ஆம் ஆண்டே இவர் ஜொஹான் பீரிசோடு இணைந்துகொண்டார். இருவருமாக சேர்ந்து ஆபிரிக்காவின் உயரமான சிகரமான கிளிமாஞ்சாரோவை ஏறி முடித்திருந்தனர். இந்த வெற்றிகரமான இணையே எவரெஸ்டை நோக்கியும் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து முடித்திருந்தது.

“உறைய வைக்கும் குளிர், உயரம், அமுக்கம் பனிக்காற்று போன்ற இயற்கையின் தடைகளுக்கு ஈடுகொடுத்து சிகரம் தொட வெறும் மனோபலம் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. எங்களுக்கு மிக அதிக உடற் பலம் தேவைப்பட்டது. நல்ல உணவு, சிறப்புப்பயிற்சிகள் என்று சகலத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதனாலேயே எங்களுக்கு இந்த வெற்றி சாத்தியப்பட்டது”

சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு “எந்த இடத்திலும், எந்த துறையிலும் ஆண், பெண்ணென்ற பேதங்கள் தடையாக இருக்கக்கூடாது. சரியான பயிற்சி, இடைவிடாத முயற்சி, தடைகளை கடந்து சாதிக்கும் மனோ உறுதி மூன்றும் கைகூடுமானால் எந்தச்சிகரமும் நீங்கள் தொடும் தூரத்தில் தான் இருக்கும் என்று புன்னகைக்கிறார் ஜெயந்தி.

 

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS