youth-women
அறுபடும் நூலிழைகள்: தொழினுட்பமும் குடும்ப உறவுகளும்
by admin
வைகாசி 24, 2016

 

 

1411655123850_wps_1_Family_including_kids_8_9

தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூகவளர்ச்சியும் மிகமிக நெருக்கமானவை. முன்னையதன் உயர்வு பின்னையதன் முன்னேற்றத்திற்கு நிச்சயம் துணை செய்யும் என்பதை மறுக்க முடியாது.

அதேநேரம், நவீன தொழில்நுட்பத்தின் உபயோகம்  சற்று முரணானால், அது சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லுமா? அழிவுப்பாதைக்கு வழியமைக்குமா ?

இன்றைய காலகட்டத்தில், வயது வேறுபாடின்றி, அநேகர் மனதில் இக்கேள்வி மின்னி மறையாதிருக்கவே முடியாது.

குறிப்பாக,   இரத்த உறவுகளும் திருமண வழி உறவுகளும் ஒன்றாக இணைந்த அழகிய கூடான ‘குடும்ப உறவுகள்’, நவீன தொழில் நுட்பத்தின் செல்லக் குழந்தைகளான  அலைபேசிகள், அது தரும் நவீன வசதிகள், இணையத் தொடர்புகள், சமூகவலைத் தளங்கள் என்பவற்றோடு பல வழிகளிலும் இறுக்கமாக கைகோர்த்துக் கொள்ளும் பொழுது,

அங்கு நம் குடும்ப உறவுகள் பலப்படுகின்றனவா?

நம்மையும் அறியாது சிறிது சிறிதாக உறவுச்சங்கிலி தேய்ந்து பலமிழந்து போகின்றதா?

“அம்மா இன்றைக்கு ஸ்கூலில…” என ஆரம்பிக்கும் சிறுவனோ சிறுமியோ தன் நெஞ்சில் முட்டி நிற்கும் பலபல புதிய விடயங்களை தாய் தந்தையிடம் சொல்ல, அவற்றிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள, நேரகாலம் பார்த்துத் தடுமாறித் தவிக்கின்றனர்.

உதாரணமாக, செவிக்கும் தோள்பட்டைக்கும் இடையில் இறுக்கமாக அகப்பட்ட அலைபேசியின் மூச்சுத்திணறலையோ, தன்தோள்பட்டையின் வலியையோ சற்றும் உணராது, தோழியுடன் முக்கிய அரட்டையில் ஈடுபட்டவாறே வீட்டுவேலைகளையும் கவனிக்கும் அன்னைக்கு,  தன் பிள்ளை என்ன சொல்ல வருகிறாள்(ன்)என்பதைக் கேட்கும் பொறுமை சற்றும் அற்றுப் போகின்றது.

“இவ்வளவு வருடங்களின் பின்னர் எப்படிப்பா அவளைக் கண்டு பிடித்தாய்? fbயிலா? பொறு பொறு; நானும் போய்ப்பார்க்கிறேன்.” அரட்டையைத் தொடர்ந்தவாறே, “என்னடா செல்லம்? அம்மா பிஸிடா; அதோ பார், அப்பா சும்மாதான் இருக்கிறார் போய்ச் சொல்லுடா.” பிள்ளையை, தந்தையிடம் தள்ளி விடுகிறாள்.

வேலையால் களைத்து வீடு வந்த தந்தையோ, அரசியல், சினிமா, முகநூல், அங்கு முகமறியா நட்புகளுடன் நலவிசாரிப்பு என இருப்பவருக்கு, குழந்தை சொல்வதைக் கேட்கும் பொறுமை இருக்குமா ?

எதையாவது சொல்லி குழந்தையைச் சமாளித்து அனுப்ப முயல்வார்; அல்லது அவரின் சுவாரஸ்சியம் அற்ற போக்கே குழந்தையை அமைதி கொள்ள வைத்துவிடும்.

சில வருடங்களில் பின், “இந்தக் காலத்துப் பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் போதும், அறைக்குள் முடங்கிவிடுவார்கள்; கதை குறைந்துவிடும்.”அனேக பெற்றோரின் முறைப்பாடு, இப்போது வெகு சாதாரணமாகி விட்டது.

கொஞ்சம் வசதி மிக்கவர்கள் என்றால், ‘ஐபாட்’ ‘டப்ளட்’ ‘கேம்ஸ்’ என வாங்கிக் கொடுத்து பிள்ளைகளின் உள்ளத்தை நிறைத்துவிடுவார்கள்.

“அவனிடம் இருக்கு இவனிடம் இல்லையென்றால் மனம் நொந்து போவான்.” தம் மனதுக்கு சொல்லும் ஆறுதல் இது. குழந்தையோடு நேரத்தை செலவிடமுடியவில்லையே என்கின்ற குற்ற உணர்வைப் போக்கவும் இது உதவுமோ என்னவோ !

அதன்பின் நடப்பதோ, பிள்ளைகள் தம்மைச் சுற்றிப் பார்க்கவே மறந்துவிடுவார்கள். தம் கரத்திலிருக்கும் நவீன தொழில்நுட்பம் மூலமே தம்மையே இனம் காண முயல்வார்கள்.

 

முடிவு? உடல் உளக்கோளாறுகள்  மட்டுமா? வலைவிரித்து, பசியோடு காத்திருக்கும் எத்தனையோ வித கொடிய ஆபத்துகளில் இலகுவாக விழுந்துவிடுவார்கள்.

வளர்ந்து வருவோர் இப்படி என்றால், வளர்ந்தோர் அவர்களுக்கும் மேலே!

வீட்டில், தம்மைச் சுற்றியுள்ள உறவுகளிடம் நலம் விசாரிக்க, அன்பாக இரு வார்த்தைகள் பேச நேரமின்றிப் போகும் இவர்களுக்கு (வயது வேறுபாடுகள் இன்றி) முகமறியா நட்பு என்பதன் அருமைபெருமை  புரிந்து, ‘காலைவணக்கம், நலவிசாரிப்பு என ஆரம்பிக்கும் தடல் புடல் இரவு வணக்கம் வரை தவறாது நடந்தேறும்.

இதுவும் எல்லை கடந்து எத்தனையோ வித ஆபத்துகளையும் இழுத்துவைக்கும் . அது தெரிந்தாலும் எட்டிப் பார்ப்பதுதான் கெட்டித்தனம் என்றால் யார் என்ன செய்ய முடியும்?

இதையே உங்கள் முகம் பார்ப்போருக்கு, உங்கள் உற்ற உறவுகளுக்கு செய்தால், உங்கள் குடும்பத்தில் அன்பின் வாசம் கசியாமல் போய்விடுமா?

நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம், நம் மன உணர்வுகளை நேருக்கு நேராக வார்த்தைகளால் உணர்த்தும் போது அதன் தாக்கமே வேறல்லவா?

செய்கைகள் அதற்குப் பலம் சேர்க்குமே!

அதைவிட்டு விட்டு, எண்ணிலடங்கா வண்ண வண்ண ‘ஸ்மைலிகள்’ துணையை நாடுவதும் தான் ஏன்? அது ஒருவரில் ஏற்படுத்தும் தாக்கம் நிலையானதா?

நவீனதொழில் நுட்பத்தின் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளான தகவல் பரிமாற்றங்கள், இணையப் புழக்கம் என்பன,  வாரிவழங்கும் நன்மைகளுக்குப் போட்டியாக தீமைகளையும் விசிறி விதைப்பதை இனம் காண வேண்டியதும் , அவற்றை விலக்கி  வெற்றி காண வேண்டியதும், நம் உற்ற உறவுகளைப் பேணிக் காக்க வேண்டியதும், நவீன வளர்ச்சியில் இணைந்த சமுதாயத்தின் அங்கங்களான நம் தலையாய பொறுப்பாகும்.

நெதர்லாந்திலிருந்து திருமதி ரோசி கஜன்,

தமிழ் நாவலாசிரியர்.

Featured image,image1: http://www.dailymail.co.uk/femail/article-2769436/Tech-taking-dinner-table-THIRD-kids-distracted-phones-meal-times-social-media-sites-biggest-draw.html

Image 1:http://www.crazywebs.net/family-bonding-facebook/

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS