youth-women
மாற்றம் ஒன்றுதான் மாறாதது – ஆடையும் கலாச்சாரமும்
by admin
சித்திரை 25, 2016

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கியம் எதற்குப்பொருந்துகிறதோ ஆடைக்கு நிச்சயமாக பொருந்தும். மனித இனம் உருவான காலத்திலிருந்து இன்றைய காலம் வரை மனிதனில் ஏற்பட்ட மாற்றங்களை பட்டியிட்டு விடலாம். ஆனால் இலைதழையில் இருந்து ஆரம்பித்து இன்றைய நவீன ஆடைவகைகளை பட்டியல் இட்டால் அது வானின் நட்சத்திரங்களை எண்ணுவதை விட கடினமானது. காரணம் மனிதர்களின் ஆசைகளும் ரசனைகளும் வேறுபட்டவை, மாறிக்கொண்டே இருப்பவை. காலமாற்றத்துக்கும் தங்களின் ரசனைக்கும் ஏற்ப மனிதர்களின் ஆடைகளும் மாறிக்கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு சமூகம்/ கலாச்சாரம்/ இனம் தமக்கென தனித்துவமான ஆடை அடையாளங்களை கொண்டிருப்பதை நம்மால் அவதானிக்க முடியும்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உடை மட்டுமல்ல, உணவுப்பழக்க வழக்கங்களில் ஆரம்பித்து சகலமும் மாற்றம் பெற ஆரம்பித்திருக்கிறது. தனித்தனி வட்டங்களாக இருந்த சமூகங்களின் தேவைகளும் விருப்பங்களும் ரசனைகளும் கலாச்சார, மொழிச்சுவர்களைத்தாண்டி விரிவடைகின்றன. உலகளாவிய ரீதியில் சகல துறைகளிலும் பிராண்ட் பொருட்கள் (மொபைல்- ஆப்பிள், குளிர்பானம்- கோகா கோலா, பெப்சி, துரித உணவு- பீட்சா, KFC) ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் போது அவற்றை உலகம் முழுவதும் அறியப்பட்டவையாகவும் விரும்பப்படுபவையாகவும் மாறுவதற்கு டிஜிட்டல் மயமாக்கம் பேருதவி செய்கிறது. இவ்வளவு காலமும் வழக்கத்தில் இருந்த வழக்கங்கள், மொழிப்பாவனை என்பன மாற்றமடைய ஆரம்பிக்கின்றன. இப்படியாக கலாச்சார வேலிகள் நெகிழும்  போது அச்சமடையும் மக்கள் தங்கள் கலாச்சார உடையை இறுகப்பற்றிக்கொள்ள நினைக்கின்றனர்.

ஒரு மனிதனை பார்க்கும் போது முதலில் நம் கண்ணில் படுவது உடை தான்.  கலாச்சாரம் பற்றி பேசும் போதே உடை பற்றிய பேச்சுத்தான் முன்னே நிற்கிறது. கலாச்சாரம் என்றாலே முழுமையாய் ஆடை அணிவது என்பதே பலரின் எண்ணப்பாடாக  இருக்கிறது. ஆடைக்குள் இருக்கும் மனிதன் முரண்களின் வடிவமாக இருக்கும் போது ஆடை என்னும் புறத்தோலைக் கொண்டு மூடிவிட்டால் போதும் என்ற எண்ணப்பாடு சரியா?

1424065133_indian culture copy

உண்மையில் கலாச்சாரம் என்பது என்ன?

கலாச்சாரத்தினை ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான,கலாச்சார ஸ்தாபனமான யுனெஸ்கோ இவ்வாறு வரையறுக்கிறது. “ஒரு சமூகத்தின் அல்லது சமூகக்குழுவொன்றின் தனித்துவமான ஆன்மீக, பொருளாதார, அறிவுசார்ந்த மற்றும் உணர்வு ரீதியான ஒட்டுமொத்த அம்சங்களின் தொகுப்பே கலாச்சாரம் ஆகும்.  இது கலை மற்றும் இலக்கியத்துக்கு மேலதிகமாக வாழ்க்கை முறை, ஒன்றிணைந்து வாழும் வழிமுறை, பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கியிருக்கிறது.”ஆகவே உடை, கலாச்சாரம் என்னும் வீட்டைக்  கட்டும் செங்கல்களில் ஒன்று மட்டுமே. கலாச்சாரத்தை காப்பதாக எண்ணி உடையில்  மட்டும் கவனம் செலுத்துவது வீடு கட்டுவதாக எண்ணிக்கொண்டு ஒரு கல்லை மட்டும் எடுத்துவைப்பதற்கு  சமமானதாகும். ஒரு மனிதனை பூரணப்படுத்தும் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டுமாயின் நாம் செய்யவேண்டியது கல்வியறிவு, விழிப்புணர்வு, நல்ல விழுமியங்கள் போன்ற கலாசாரத்தின் சகல கூறுகளையும் கட்டியெழுப்ப வேண்டியதே ஆகும்.

பெண்களின் உடையே அவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு முக்கிய காரணம் என்பது பலருடைய நம்பிக்கையாக இருக்கிறது. இந்த கருத்து சரியானது தானா?

கொழும்பு சட்டக்கல்லூரி மாணவியான நிரோஷா சொல்கிறார். “பக்கத்து வீட்டில் திருடி விட்டு அந்த வீட்டு மனிதர்கள் விதம் விதமான பொருட்களோடு சுகமாய் வாழ்ந்தது அவர்களுடைய தவறு என்று காரணம் சொல்ல முடியுமா? ஆணாகிலும், பெண்ணாகிலும் சரி சமமான உரிமை கொண்டவர்கள், சரி சமமாகப்பார்க்கப்பட வேண்டியவர்கள், பெண்கள் வெறும் போகப்பொருள் இல்லை என்ற மனப்பாங்கை சமூகத்திடம் வளர்த்தெடுக்காமல் பெண்களின் ஆடையே குற்றங்களுக்கு காரணம் என்று சொல்வது தவறானது. உதாரணமாக எங்கள் கலாச்சார உடை சேலை, ஆனால் அதைக்கூட ஆபாசமாய் அணிய முடியும். சமூக மட்டத்தில் மனப்பாங்கு மாற்றம் ஏற்படாவிடின் இவ்வகைக்குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை”

யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக மாணவி சண்மினியிடம் கேட்டபோது  “பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு மக்களிடையே  ஏற்படும்  மனப்பாங்கு மாற்றமும், விழிப்புணர்வுமே தீர்வுகள் என நான் நினைக்கிறேன். உண்மையான பிரச்சனையின் வேரை ஆராய்ந்து தீர்வு காண்பதை விடுத்து பெண்களின் ஆடையை  குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் எனக்கு அர்த்தமுள்ளதாகப்படவில்லை.” என்று தெரிவித்தார்.

“நிறுவனங்கள் வேண்டுமானால் CASUAL , FORMAL என்று விதிமுறைகளை வைத்திருக்கலாம், இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று சில விதிமுறைகளை சொல்லலாம். உதாரணமாக நான் படித்த கல்லூரியில் ஆண்களும் பெண்களும் குட்டையான (முழங்கால்களுக்கு மேல்) ஆடைகளை அணிந்து வருதல் தடுக்கபட்டிருந்தது. எந்த ஆடை அணிந்தாலும் அந்த விதிமுறைகளுக்குள் வருமாறு நாம் பார்த்துக்கொள்வோம். என்னை பொறுத்தவரை அதில் தவறில்லை. ஆனால் இதைத்தான் அணிய வேண்டும் என்று சொல்வது தவறு.” இது கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் ஆண்  ஒருவரின் கருத்து.

இலங்கை மக்களின் இணையப்பாவனையும் மொபைல் பாவனையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை காலமும் அறிமுகமில்லாத புதிய விடயங்கள் தடையின்றி கிடைக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதன் தீய விளைவாக ஆபாச ஊடகங்கள் யார் கையிலும் சிக்கலாம், இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. கூகிள் இணையத்தளம் 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி உலகில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய முதல் நாடாக இலங்கையும் அடுத்த இடத்தில் இந்தியாவும் இருக்கிறது! இளைய சமுதாயத்தினரின் மொபைல் பாவனை காதல் தொடர்புகளை ஆரம்பிப்பதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியமும் சுகாதார அமைச்சும் இணைந்து விளியிட்ட வெளியீடு ஒன்று தெரிவிக்கிறது. இந்த நிலையில் பாலியல் குற்றங்கள், பதின்வயதுக்கர்ப்பங்கள் என்பவற்றை எப்படி குறைப்பது? கட்டுப் பாடுகள் மூலம் இதனை செய்ய முடியுமா? அப்படியே முடிந்தாலும் எவ்வளவு காலத்துக்கு அது சாத்தியப்படும்?

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஒருங்கிணைந்த இனவிருத்திச்சுகாதாரம் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு. அருண் ஜென்றிக் இதற்குப்பதிலளித்த போது “முதலில் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரமும் தனிநபர் உரிமைகளும் பற்றிய தெளிவான அறிவு சமூகத்துக்கு கடத்தப்பட வேண்டும். இளைய சமுதாயத்துக்கு சிறுவயதில் இருந்தே வயதுக்கேற்ற வகையில் பாடசாலைகளில் இது பற்றிக்கற்பிக்கப்படவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரமும் தனிநபர் உரிமைகளும் பற்றிய புரிந்துணர்வு உருவாகுவதோடு இளைய சமுதாயம் இதை முதிர்ச்சியுடனும் அறிவு பூர்வமாகவும் அணுக முடியும். சமூக மட்டத்திலும் வளர்ந்தோர் மத்தியிலும் இதே விழிப்புணர்வுச் செயன்முறைகள் நடாத்தப்படவேண்டும். சுகாதார அமைச்சு, மருத்துவ மாதுக்கள், பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் குழுக்கள், பல்வேறு சமய அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள் போன்ற பல தரப்பினரும் இணைந்து சமூக மட்டத்தில் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரமும் தனிநபர் உரிமைகளும் பற்றிய விழிப்புணர்வையும் மனப்பாங்கு மாற்றத்தையும் ஏற்படுத்த விழையும் பட்சத்தில் நீண்ட கால நோக்கில் இந்த பிரச்சனைக்கு ஆரோக்கியமான தீர்வு கிட்டும்” என்றார்.

அருண் அவர்கள் சொன்னது போல நாம்  இந்த விடயம் குறித்து பேசாமல் ஒதுக்கி வைக்கும் போது மறுபுறம் இணையம் மற்றும் பிற வழிகள் மூலம் இது குறித்த சகல விடயங்களும் சமூகத்துக்கு கிடைக்கிறது .தங்களுக்கு கிடைப்பவை  எது சரி, எது தவறென்று தெரியாத திரிசங்கு சொர்க்கத்தில் சமுதாயம் மாட்டிக்கொள்கிறது. பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரமும் தனிநபர் உரிமைகளும் பற்றிய முழுமையான அறிவு வழங்கப்படும் போது கிடைக்கும் வளங்கள் எவையாயினும் அவற்றின் சரி, பிழையை அலசி அறிவு சார் முடிவெடுக்கும் திறன் சமூகத்திடம் உருவாகும். அத்தோடு பதினெட்டு வயதுக்குட்பட்ட தங்கள் சிறார்களின் இணையப்பாவனை மற்றும் நண்பர்களின் சேர்க்கை, மொபைல் போன் பாவனை என்பவற்றில் பெற்றோரும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். இவைகளே நீண்ட  கால நோக்கில் பலன் தரக்கூடிய தீர்வுகளாகும்.

ஆண், பெண், சாதி, சமயம், இனம் போன்ற பாகுபாடுகளின்றி  மனிதர்கள் என்ற ரீதியில் அனைவரும் சமம் என்ற  மனப்பாங்கு சமூகத்திடையே வளர்த்தெடுக்கப்படவேண்டும். பெரியவர்களை மதித்தல். பெரியவர்கள், குடும்பத்தினரிடம் பிரச்சனைகளை மனம் திறந்து பேசும் பழக்கம் என்பன இளைய சமுதாயத்தினரிடம் ஊக்கப்படுத்தப்படவேண்டும். பண்பாடு, நெறிமுறைகள், நல்ல விழுமியங்கள் போன்ற கலாசாரத்தின் சகல கூறுகளையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வது நம் ஒவ்வொருவரினதுமே கடமையாகும்.

Feature image: http://www.digitalartistdaily.com/image/21495/indian_culture

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS