women
பெண் தலைமைத்துவத்தை ஸ்திரப்படுத்துதல்
by admin
சித்திரை 19, 2016

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்கள் சதவீதத்தில் 59.7% பெண்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்த புள்ளி விபரத்துக்கு முரணாக வேலையின்றி இருக்கும் மக்கள் குடித்தொகையில் 67.71% பெண்களாக இருக்கிறார்கள். அதிலும் கடந்த மூன்று தசாப்தங்களாக, வேலைபார்க்கும் குடித்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட 2.6 மில்லியனால் அதிகமாக மாறாமலே இருக்கிறது.  வெறும் 10.3% ஆன பெண்கள் மட்டுமே முதலாளிகளாக விளங்குகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்களினால் தொழில் வாழ்க்கையில் சோபிக்க முடியாமைக்கு என்ன காரணம்? இந்தக்கேள்வி பதில் தெரிந்து கொள்ள வேண்டியதும் உடனடியாக தீர்வை நோக்கி முதலடி எடுத்து வைக்க வேண்டியதும் ஆகும்.

தொழில் செய்யும் குடித்தொகையில் பெண்களின் பின்னடைவுக்கான  காரணங்கள்

  1. கல்வியில் காலம் காலமாக நம்பப்படும் ஆண், பெண் பாகுபாடு : பெண்கள் கலை, மருத்துவம், மருத்துவம் சார் கற்கைகள், சித்தமருத்துவம் ஆகிய கற்கைநெறிகளை தெரிந்துகொள்ளும் அதேவேளை ஆண்கள் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள பொறியியல், கட்டடக்கலை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை தெரிவு செய்கிறார்கள்.
  2. நெகிழ்வுத்தன்மையற்ற தொழில் செய்யும் சூழல்: 62% ஆனா பொருளாதார ரீதியில் செயலற்ற நிலையில் இருக்கும் பெண்கள் தீவிரமாக வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறவர்களாக இருக்கின்றனர்.
  3. குறைந்த செலவில், தரமான குழந்தைப்பராமரிப்பு வசதிகள் இல்லாமையினால் பல பெண்கள் குழந்தைப்பிறப்புக்குப்பின் வேலைக்குத் திரும்புவதேயில்லை.
  4. ஆண்களுக்குச் சாதகமான தனியார் துறை : 2012 ஆம் ஆண்டில் 10000 பெண் ஊழியர்களை பணிநீக்கம் செய்த தனியார் துறை 45,000 ஆண் ஊழியர்களை உள்வாங்கிக்கொண்டிருந்தது.

“இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியை நோக்கிய பயணத்தின் துருப்புச்சீட்டுக்களாய் விளங்கும் பெண்களின் மீது முதலீடு செய்தல்: பெண் தலைமைத்துவத்தை ஸ்திரப்படுத்த நாம் செய்யவேண்டியவை என்னென்ன?” என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஏற்பாடு செய்திருந்த நிபுணர் குழுக்கலந்துரையாடல் சமீபத்தில் இடம்பெற்றது.

හරින් ප්‍ර‍නාන්දු, අම්බිකා සත්කුණනාදන්, හර්ෂ ද සිල්වා

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் திரு. ஹரின் பெர்னாண்டோ, வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் டாக்டர். ஹர்ஷா டி சில்வா, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி அம்பிகா சற்குணநாதன் , கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். லக்ஷ்மன் திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட நிபுணர்கள் கலந்து கொண்ட குழுக்கலந்துரையாடலில் மிக ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்களும் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

“இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியை நோக்கிய பயணத்தின் துருப்புச்சீட்டுக்களாய் விளங்கும் பெண்களின் மீது முதலீடு செய்தல்: பெண் தலைமைத்துவத்தை ஸ்திரப்படுத்த நாம் செய்யவேண்டியவை என்னென்ன?” என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஏற்பாடு செய்திருந்த நிபுணர் குழுக்கலந்துரையாடல் சமீபத்தில் இடம்பெற்றது.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் திரு. ஹரின் பெர்னாண்டோ, வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் டாக்டர். ஹர்ஷா டி சில்வா, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி அம்பிகா சற்குணநாதன் , கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். லக்ஷ்மன் திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட நிபுணர்கள் கலந்து கொண்ட குழுக்கலந்துரையாடலில் மிக ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்களும் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

பெண்கள் வேலைக்கு செல்லாதிருப்பதற்கான முக்கியமான காரணம் குடும்பப்பொறுப்பே. இரண்டாவது காரணம் போக்குவரத்திலும் வேலைத்தளங்களிலும் அவர்கள் எதிர்நோக்கும் துன்புறுத்தல்களே என்று பிரதியமைச்சர் ஹர்ஷா டீ சில்வா தெரிவித்தார். 

பால்நிலைப்பாகுபாடு, கலாச்சாரம் எல்லாமாக சேர்ந்து பெண்கள் தலையில் வீட்டுப்பொறுப்பு , அலுவலகப் பொறுப்பு என இரட்டை சுமைகளை சுமத்தி விட்டன. வேலைக்குச்செல்லும் தாய் எங்கே நாம் நம்  குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருத்தல் என்னும் கடமையிலிருந்து தவறி விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறாள். இந்த இரட்டை சுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க சட்டங்கள் என்னவோ இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை சரியாக அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது தான் கேள்விக்குறி.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்துத்தெரிவிக்கும் போது சட்டங்கள் இயற்றப்பட்டு அமுலுக்கு வந்தாலும் நல்ல குணங்களும் மனப்பாங்கும் சட்டங்கள் மூலம் வளர்த்தெடுக்கப்பட முடியாதவை. இவை ஆண்  மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோரால் போதிக்கப்பட வேண்டியவை என்றார்.

E25_7165

கொழும்புப் பல்கலைக்கழகத்தின்  ஓய்வு பெற்ற சட்டத்துறை பேராசிரியர் சாவித்திரி குணசேகர கருத்து தெரிவிக்கும் போது அரசாங்கம் அவ்வாறு கடமையில் இருந்து விலக இயலாது. குற்றங்களுக்கு உடனடியான தண்டனை கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.. இல்லையேல் குற்றங்கள் சட்டபூர்வமானவை என்றாகிவிடும் என்றார்

பிரதியமைச்சர் ஹர்ஷா டீ சில்வா ” இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது. இந்தத்துறையில் பெண்களை உள்ளீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

அதற்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதிலளிக்கையில் “ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர். அதில் பெரும்பான்மையானோர் பெண்களே. அரசாங்கம் அவர்களுக்கு தகவல் தொழினுட்பப்பயிட்சி அளிப்பது தொடர்பாக திட்டமிடுகிறது. அப்படியாயின் பெண்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும் சந்தர்ப்பம் அமையலாம்” என்று குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்ற சட்டத்துறை பேராசிரியர் சாவித்திரி குணசேகர  வீட்டில் இருந்து பெண்கள் வேலை பார்த்தல் என்ற கருத்தை ஆதரிக்கவில்லை. ஒரு வேலைத்தளத்தில் தன பூரண ஆற்றலுக்கும் ஏற்ற விதத்தில் பணி செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு. வீட்டில் இருந்து வேலை பார்த்தலால் அவர்களின் முழுத்திறமையும் பயன்படுத்தப்பட முடியாது.பெண்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்பதற்காய் மட்டும் வேலைவாய்ப்பை வழங்காமல் உண்மையில் அவர்களது ஆற்றல் மற்றும் தகுதிக்காக வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது நடைபெற வேண்டுமானால் வேலை செய்யுமிடங்களில் தனிப்பட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். குடும்பப்பொறுப்பு பெண்கள் தலையில் முழுமையாக சுமத்தப்படக்கூடாது. பெண்களும் குடும்பப்பொறுப்பு முழுக்க முழுக்க தங்களை சார்ந்தது என்ற கருத்தியலை உடைத்து  வெளிவர வேண்டும். சமுதாயத்தின் விழுமியங்களை மாற்றுவதில் முக்கிய பங்கு அரசுக்கே உண்டு.

பேச்சாளர்கள் அரசநிறுவனங்களில் இருக்கும் பிரச்சனை தொடர்பில் ஆராயும் போது பிரசவத்துக்கான விடுமுறை தாய்க்கு மட்டுமே வழங்கப்படுவதை குறிப்பிட்டனர். தந்தைக்கும் விடுமுறை வழங்கப்படுமாயின் அது குடும்பப்பொறுப்பு தாய்க்கு மட்டும் உரியது அல்லவென்பதை வலியுறுத்துவது போல அமைவதுடன் கணவன் மனைவி இருவருமே பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கும். சில போலீஸ் நிலையங்களில் இன்னுமே பெண்கள் மீதான குடும்ப வன்முறை குற்றமாக கருதப்படாமல் குற்றவாளியுடன் சமரசமாக போகும் படி அறிவுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் அனுப்பபடுவதை பேச்சாளர்கள்  சுட்டிக்காட்டினர்.

MAS நிறுவனத்தின் பெண்களுக்கான பிரதிநிதியான ஷானல் பிரீனா பேசும் பொது முதலில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். இப்போதெல்லாம் பெண்களின் உருவத்தை வர்ணித்துப் பேசுதல், கிண்டல் செய்தல் என்பன சஜஜமாக மாறிவிட்டது. ஆனால் இது சாதாரணமானதல்ல. மன ரீதியாக சம்பந்தப்பட்ட பெண்ணை காயப்படுத்தும் செயலாகும். இது நிச்சயம் அப்பெண்ணின் வேலைத்திறனை பாதிக்கும். நிறுவனங்கள் பெண்களின் முழுமையான பங்களிப்பையும் ஈடுபாட்டுடன் கூடிய வேலையையும் விரும்பினால் பெண்களுக்கு அவர்களின் அலுவலகத்தில் ஆரோக்கியமான சூழல் வழங்கப்படுவதை உறுதி செய்வது அவர்களின் கடமை ஆகும்.

கொழும்புப்பல்கலைக்கழக துணைவேந்தர் லக்ஷ்மன் திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் “பெண்கள் துணிச்சலாக ஆண்களுக்கானவை என்று நம்பப்படும் பாடத்துறைகளில் கல்விகற்க முன் வர வேண்டும். இதற்கான வழிகாட்டல் பாடசாலைப்பருவத்திலேயே அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

பால்நிலை சமத்துவமானது அபிவிருத்தி மற்றும் வறுமையை குறைக்கும் முக்கிய படிநிலை ஆகும். வலுப்படுத்தப்பட்ட சுயமாக தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பெண்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக்கு பொறுப்பாவதுடன் அடுத்த சந்ததியினரின் நல்வாழ்வையும் உறுதிப்படுத்துவார்கள். ஆகவே பெண்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்காமல் பெண்களின் அபிவிருத்தி நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றலாம் என்ற கண்ணோட்டத்தில் சிந்திப்பதே ஆரோக்கியமானது.

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS