பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் கையாள்வதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னுதாரணம்
by admin
மாசி 17, 2016

பால்நிலை அடிப்படையிலான வன்முறை என்பது ஒரு சமூகத்தின் மீது விழும் ஆழமான காயம் போன்றது. அது தனியொரு நபரை மட்டும் பாதிக்கப்போவது இல்லை. அவருடைய குடும்பம், குழந்தைகள் என்று ஆரம்பித்து, அதன் முடிவுப்புள்ளி அந்த நபர் சார்ந்த சமூகத்திற்கே சென்று முடியும். பால்நிலை  அடிப்படையிலான வன்முறை பல சந்தர்ப்பங்களில் சமூகக்கட்டுப்பாடுகள், குடும்ப கௌரவம், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையின்மை போன்ற காரணிகளால் வெளியில் சொல்லவே தயங்கும் ஒன்றாக இருக்கிறது. பால் அடிப்படையிலான வன்முறை சம்பவம் ஒன்றில் ஒருவர் பாதிக்கப்படும் போது அவர் அணுகுவதற்கு நம்பகமான கட்டமைப்பு ஒன்று இருக்க வேண்டும். அவரது பிரச்சனைக்கு அரசு, மருத்துவமனை, பொலிஸ் போன்ற துறைகளில் உள்ள உரிய அதிகாரிகள் சரியான சமயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் சரியான முறையில் தொகுக்கப்பட்டு பால்நிலை அடிப்படையிலான வன்முறையை ஒழிக்கும் தேசிய மட்டத்திலான திட்டமிடலுக்கு பங்களிக்க வேண்டும். இதற்கு அரச, அரசசார்பற்ற பங்காளர்களின்  சிறப்பான வலையமைப்பு ஒன்று இயங்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தலைமை தாங்கும்,  தேசிய பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரின் கிழக்கு மாகாண விஜயத்தின் போது நடாத்தப்பட்ட பல்வேறு துறையினருடனான  கலந்துரையாடல்களின் மூலமும், அவதானிப்புக்களின் மூலமும் கிழக்குமாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை விட பால்நிலை அடிப்படையிலான வன்முறையை கையாள்வதில் மட்டக்களப்பு மாவட்டம் சிறப்பான வலையமைப்பை கொண்டுள்ளது அவதானிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனப்பணியாளர்கள் அனைவருமே தாங்கள் ஒற்றுமையுடனும், முனைப்புடனும் ஒரே குழுவாக பணியாற்றுவதாக தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும்  மாவட்ட மட்ட செயலணியின்(Gender Based Violence Task Force) இணைப்பாளர் கந்தையா ராஜலக்ஷ்மி அவர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடினோம்.

உங்களைப்பற்றிக் கூறுங்கள்?

நான் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். 2004 ஆம் ஆண்டில்  பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் மாவட்ட மட்ட செயலணியில் அங்கத்தவராக இணைந்து கொண்டேன். வைத்தியசாலைகளில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை உதவிப்பிரிவினை   ( GBV help desk) வைத்தியசாலைகளில் ஸ்தாபிக்கும் முயற்சியில் ஊக்கமாக செயற்பட்டதனால் அடையாளம் காணப்பட்டு,  மட்டக்களப்பு மாவட்டத்தின் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை  குறைக்கும்  மாவட்ட மட்ட செயலணியின் இணைப்பாளராக சிபாரிசு செய்யப்பட்டேன். 2012 ஆம் ஆண்டில் இருந்து இணைப்பாளராக இருந்து வருகிறேன்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மாவட்ட மட்ட செயலணி என்பது என்ன? அது எவ்வாறு இயங்குகிறது? என்று கூறுங்களேன்?

இந்த செயலணி 2004 ஆம் ஆண்டு திட்டமிடல் மணிப்பாளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் பெண்கள், மனித உரிமைகள் தொடர்பாக பணியாற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், வைத்தியர்கள் உள்ளிட்டோரோடு ஆரம்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் பதியப்படும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள், உரிய தரப்புக்களால் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்தல், வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்கள் போன்ற சகல தரப்பினரையும் ஒருங்கிணைத்தல், திட்டமிடல், சம்பவங்களை ஆவணப்படுத்தல் என்பன இந்த செயலணியின் நோக்கமாகும்.

 

வைத்தியசாலைகளில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கான உதவிப்பிரிவை ஸ்தாபிப்பதில் முன்னின்று செயல்பட்டதாக கூறினீர்கள். அதை பற்றிகூறமுடியுமா?

வைத்தியசாலைகளில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட பிரிவு இதுவாகும். இப்பிரிவு பாதிக்கப்பட்டோருக்கு உடல், உள சிகிச்சைகளை உடனடியாக வழங்க உதவும். இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து வைத்தியசாலைகளில் உதவிப்பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் ஆறு வைத்தியசாலைகளில் உதவிப்பிரிவுகளும் ஸ்தாபிக்கப்பட்டு மக்களுக்கு சேவை வழங்கி வருகின்றன. மாவட்டம் முழுவதுக்கும் போதுமான வகையில் அவை இப்போதைக்கு இருந்தாலும் மேலும் சில ஆதார வைத்தியசாலைகளிலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கான  உதவிப்பிரிவை ஸ்தாபிப்பதற்காக முயல்கிறோம்.

 

ஒரு இணைப்பாளராக உங்கள் கடமைகள் என்னென்ன?

பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரோடு இணைந்து பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மாவட்ட மட்ட செயலணி யின்  மாதாந்த  கூட்டங்கள் நிகழ்த்தப்படுவதை உறுதி செய்தல், மாவட்டமட்டத்தில் பதியப்படும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு உரிய பிரதேச செயலகங்கள் மூலம் தீர்வு காணப்படுவதனைக் கண்காணித்தல், மாதாந்தக்  கூட்டத்துக்கான அறிக்கை சமர்ப்பித்தல், ஆவணப்படுத்துதல் என்பனவாகும்.

ஒரு இணைப்பாளராக உங்கள் கடமையை செய்யும் போது, பல்வேறு துறையினருடைய ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கிறது?

எல்லோருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் கடைமையாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். வைத்தியர்கள், அரச திணைக்களங்களை சேர்ந்தவர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்று சகல தரப்பினரும் முழு ஒத்துழைப்பை வழங்குவதோடு அறுபதுக்கும் மேற்பட்டோர் செயலணியின் மாதாந்தக் கூட்டங்களுக்கு சமூகமளித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இப்படி பலதரப்பட்டவர்களின் ஒத்துழைப்பு இருப்பதாலேயே மட்டக்களப்பு மாவட்டத்தினால் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் நோக்கில் பலமானதொரு வலையமைப்பை உருவாக்க முடிந்தது என்பது என் எண்ணமாகும்.

 

வீட்டுப்பொறுப்பு,வேலை, இணைப்பாளர் பதவி இத்தனையையும் சமாளிப்பது சிரமமாக இருக்கிறதா?

(சிரிக்கிறார்)

ஆரம்பம் முதலே பெண்கள் நலன் தொடர்பில் பணியாற்றி வந்ததினால் அந்தத்துறை எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதுமே குடும்பத்துக்கு ஒதுக்கும் நேரத்தை குடும்பத்துக்கும் வேலை நேரம் வேலைக்கும் என்று சரியாக திட்டமிட்டுக்கொண்டால் எந்தத் தடையும் நேராது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதோ நம்மாலான உதவியை செய்கிறோம் என்ற எண்ணமே என்னை தொடர்ந்து உற்சாகமாக இயங்க வைக்கிறது.

 

நன்றி:  கந்தையா ராஜலக்ஷ்மி

Feature image: http://devozine.upperroom.org/community/join-hands-day/

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS