women
பால் அடிப்படையிலான வன்முறை – இடைவெளிகளை இணைக்கவேண்டிய அவசியம்
by admin
மாசி 2, 2016

ஷர்மிலா திருகோணமலையில் பின் தங்கிய கிராமம் ஒன்றை சேர்ந்தவள். நிரோஷனைக்  காதலித்து, பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கிடையிலும்  திருமணம் செய்து கொண்டு கணவரின் வீட்டுக்கு வந்தவளை  அவளது கணவரின் உறவுகள் ஏற்றுக்கொண்டது அவளுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது. தன்னுடைய பெற்றோர் தன்னை வெறுத்து ஒதுக்கினாலும் கணவனின் துணையினால் எல்லாத்துன்பங்களையும் கடந்து விடலாம் என்று நம்பியிருந்த ஷர்மிலாவுக்கு வாழ்க்கை அவள்  நினைத்த கோணத்தில் செல்லவில்லை.

முதல் பிரச்சனை அவளுக்கு நிரோஷனின் குடும்பத்தாரிடம் இருந்து தான் புறப்பட்டது. வரதட்சணை இல்லாமல் வீடு வந்த மருமகள் என அவளை சொல்லாலும் செயலாலும் அவர்கள் காயப்படுத்தியபோது அவள் மனதளவில் நொந்து போனாள். நிரோஷனிடம் ஆதரவு தேடிய போது  அவன் அதை காது கொடுத்தும் கேட்காமலிருந்தது அவளுக்கு அதிர்வையே கொடுத்தது. பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துவாழப்பழகிய ஷர்மிலாவுக்கு பேரதிர்ச்சியாக நிரோஷன் தினமும் அளவுக்கு மீறிக்குடித்து விட்டு வீடு வர ஆரம்பித்தான். காதுகொடுத்து கேட்க முடியாத சொற்களினால் அவளை அர்ச்சனை செய்வதோடு ஆரம்பித்தது போகப்போக அடி உதை என்று அது உருமாற ஆரம்பித்தது. அவர்களின் முதல் குழந்தையான ப்ரீதா பிறந்த பிறகும் நிலைமை மாறவில்லை. மாறாக இன்னும் மோசமாய் மாறியிருந்தது.

வீட்டுச்செலவுக்கு கணவன் பணம் கொடுப்பதை நிறுத்தி விட வீட்டுவேலைகளுக்கு போய் தன் குடும்பத்திற்காய் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலைமை வந்தும் ஷர்மிலா தயங்கவில்லை. கடுமையாய் உழைத்தாள். ஆனால் அவளுடைய சொற்ப வருமானமே குடும்ப வண்டி ஒடக் காரணமாயிருக்கையில், அதையும் கேட்டு நிரோஷன் அடி உதை என தகராறு செய்ய ஆரம்பிக்க, செய்வதறியாமல் திகைத்தாள் ஷர்மிளா.

சொந்தக்குடும்பப் பிரச்சனையை வெளியே எடுத்துசெல்லக்கூடாது, என்னதான் அடித்தாலும், பெயருக்கேனும் நிரோஷனின் துணை இல்லாது அவளும் மகளுமாய் வாழும் ஓர் வாழ்வை அவளுக்கு  கற்பனைசெய்யக்கூட பயமாயிருந்தது. பல்லைக்கடித்துக்கொண்டு அடி உதைகளோடு வாழ்வை நகர்த்தியவள் வழக்கம் போல குடிக்க பணம் கொடுக்குமாறு ஆரம்பித்த நிரோஷன் ப்ரீதாவையும் தாக்க ஆரம்பிக்க, நிலைகுலைந்து போனாள். நெற்றியில் காயத்தோடு “அம்மா” என்று வீறிட்ட குழந்தையை கண்டதும் மற்றதெல்லாம் மறந்து போக அவள் ப்ரீதாவையும் இழுத்துக்கொண்டு வெளியே ஓடினாள். கணவன் கெட்டவார்த்தையில் திட்டியபடி பின்னாலேயே வர சுற்றம் வேடிக்கை பார்த்தது. வெகுசிலர் கண்களில் அனுதாபம் தெரிந்தாலும் உள் குடும்ப விவகாரங்களில் தலையிடாத நாகரிக வாதிகளாக அவர்கள் மௌனித்து நின்று கொண்டிருந்தனர். கையில் அகப்பட்டதை தூக்கி வீசியபடி ஓடிவந்த கணவனிடம் இருந்து தப்பிக்க வந்துகொண்டிருந்த பஸ்ஸில் மகளோடு ஏறிவிட்டாள் ஷர்மிளா.

டிக்கட்டுக்கு பணமும் இல்லை. எங்கே போகிறேன் என்று சொல்லவும் தெரியவில்லை! அனுதாபம் காட்டிய பஸ் நடத்துனர் நகரின் மையத்தில் இறக்கிவிட திக்குத்திசை தெரியாமல் மகளோடு நின்று விழித்தாள் சர்மிளா. கையில் ஒரு சதமேனும் காசில்லை. எங்கே போவது என்றும் தெரியவில்லை. வலியில் அழும் குழந்தை ஒருபுறம், இப்படியே அங்கும் இங்கும் அலைபாய்ந்தவளின் மீது அங்கு நின்ற போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. அவளை ஸ்டேஷனுக்கு அழைத்துப்போனவர்கள் கேட்ட எந்தக்கேள்விக்கும் அவளுக்கு பதில் தெரியவில்லை. மொழிப்பிரச்சனை!

அன்று சனிக்கிழமையாதலாய் போலீஸ் நிலையத்திலேயே இருக்க வைக்கப்பட்டு கச்சேரியின் மகளிர் விவகார அதிகாரிக்கு செய்தி அனுப்பப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் அரசாங்க விடுமுறை நாள். திங்கட்கிழமை வரை பாதுகாப்பாக இருக்க ஒரு இடம் இன்றி ஸ்டேஷனிலேயே அமர வேண்டிய நிலை ஷர்மிலாவுக்கு!

குடும்ப வன்முறையில் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வந்த பெண்ணுக்கு பாதுகாப்பான தங்குமிடம் அங்கே இல்லை. மருத்துவ ரீதியாகவும்  மனவியல் ரீதியாகவும் எந்தவித ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான திட்டங்களும் இல்லை. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கையாளவென எந்தவொரு முன்னாயத்தமோ வலையமைப்போ கூட இல்லை!

  • அரசாங்கத்திடம் இதற்கென போதுமான நிதி இருக்கிறது.
  • மகளிர் அபிவிருத்தி அலுவலர்கள் இருக்கிறார்கள்.
  • போலீசிலும் பால் அடிப்படையிலான வன்முறைகளை கையாள்வதற்கென ஒரு அலுவலர் இருக்கிறார்.
  • பால் அடிப்படையிலான வன்முறைகளை கையாள சர்வதேச , உள்ளூர் அமைப்புக்கள் நிறைய இயங்குகின்றன.

ஆனாலும் ஷர்மிலாவுக்கு உதவ முடியவில்லை. யாரால் எங்கே தவறு நிகழ்ந்தது?

சென்ற வாரம் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்   கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பட்ட குழுக்களுடன் பால் அடிப்படையிலான வன்முறை தொடர்பில் பல கலந்துரையாடல்களை நடாத்தியது. பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை), அம்பாறை அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த அரச அலுவலர்கள், பால் அடிப்படையிலான வன்முறை தொடர்பில் பணியாற்றிவரும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்தக்கலந்துரையாடலில்     கிழக்கு மாகாணத்தில் பால் அடிப்படையிலான வன்முறை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தாம் சந்திக்கும் இடர்பாடுகள், உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

IMG_1766 (1)

படம் 1: திருகோணமலை பிரதேச செயலர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினால் கிழக்கு மாகாணத்தில் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட பல்வேறு தரப்பினருடனான தொடர் கலந்துரையாடல்களின் சாரம் பின்வருமாறு.

தரவுகள்

உரிய அலுவலர்களிடம் தரவுகளை பதிவு செய்யும் முறையான கட்டமைப்பு ஒன்று இல்லை. இப்போதைக்கு ஒட்டுமொத்த சம்பவங்களின் எண்ணிக்கையை மட்டும் பதவு செய்து கொள்கின்றனர். பிரதேசத்தில் என்ன வகை வன்முறை அதிகம் நடைபெறுகிறது என்றோ, கடந்த வருடத்துடனான ஒப்பீடுகளோ எவையும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் பிரச்சனையின் வேரை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவோ, முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதோ முடியாமல் இருக்கிறது. அத்துடன் மாவட்ட மட்டத்தரவுகள் தேசிய மட்டத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அப்போதே கொள்கை நிலையில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பால் அடிப்படையிலான வன்முறைக்கான நடவடிக்கைகளில்  அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களோடு ஒப்பிடும் போது மட்டக்களப்பு மாவட்டம் அனைத்து தரப்பினரையும் இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கி அதை குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகரமாக இயங்கவைத்துக்கொண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான தங்குமிடம்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட நபரை மீண்டும் பிரச்னையை தீர்க்க முன் அதே குடும்பத்துக்குள் அனுப்ப முடியாது. பாதிக்கப்பட்டவருக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வரை பாதுகாப்பாக தங்கவைக்க தற்காலிகமாக ஒரு இடம் தேவை. எப்போதும் எந்த பாதிக்கப்பட்டவர் வந்தாலும் உடனடியாக அழைத்துச்செல்லக்கூடியவாறு முன்னேற்பாடுகளுடன் அது இயங்க வேண்டும்.

பல்வேறுபட்ட அலுவலர்களிடம் பால் அடிப்படையிலான வன்முறை குறித்த புரிந்துணர்வு

அரச, தனியார், போலீஸ், வைத்தியர்கள், சுகாதார அமைச்சு ஆகிய தரப்பினருக்கும் பால் அடிப்படையிலான வன்முறையின் முக்கியத்துவம் குறித்த முழுமையான புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவதும் இதில் அவர்களுடைய பொறுப்பும் கடமைகளும் பற்றிய தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதும்  பாதிக்கப்பட்டவருக்கு உடனடி பாதுகாப்பும் நிவாரணமும் கிடைக்க வழி வகுக்கும்.

பால் அடிப்படையிலான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் அணுகுவதற்காக வைத்தியசாலைகளில் ஒரு பிரிவு உண்டு (Gender Based Violence Desk)  அம்பாறை மாவட்டத்தில் 6 வைத்தியசாலைகளிலும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 5  வைத்தியசாலைகளிலும், திருகோணமலை மாவட்டத்தில் 1 வைத்தியசாலையிலும் அப்பிரிவு உள்ளது.

சமூகத்தின் மனப்பாங்கு

முக்கியமாக குடும்ப வன்முறைகளை எடுத்துக்கொண்டால் கணவன் மனைவியை தாக்குவதோ துன்புறுத்துவதோ சர்வசாதாரணம், அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை என்பது மக்களிடையே உள்ள பொதுவான மனோபாவம். தொடர்ச்சியான குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் கூட இந்த மனப்பாங்கின் காரணமாக தமக்கு நேரும் இன்னல்களை தாம் சகித்தே வாழவேண்டும் என்று எண்ணிக்கொள்கிறார்கள். பால் அடிப்படையிலான வன்முறை தொடர்பில் சம்பந்தப்பட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தி முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளை சமூகத்தின் மனப்பாங்கு மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே நீண்ட கால நோக்கில் இந்த பிரச்ச னையை இல்லாதொழித்தல் சாத்தியப்படும்!

12659687_1295889613760480_771722937_n

படம் 2: பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான மன்றம்

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்தலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதையும் நோக்கமாக கொண்டு செயற்படும் போது பல்வேறு தரப்பினை சேர்ந்தவர்களும் தனித்தனியாக இயங்குதல் வெற்றி அளிக்காது என்பதனால் அகில இலங்கை ரீதியாக இது தொடர்பாக பணியாற்றும் பல தரப்பினரும் இணைந்து பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான மன்றம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த மன்றத்தில் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள், சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் அமைச்சின் பெண்களுக்கான தேசிய பேரவையால் தெரிவு செய்யப்பட்ட அரச பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் நிறுவனகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் என்பன உறுப்பினர்களாக உள்ளன. பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பில் பணியாற்றுவபர்களுக்கு இடையிலான புரிந்துணர்வும் ஒருங்கிணைப்பும், தகவல் மற்றும் வளங்களின் பரிமாற்றம், பலதரப்பினரிடமும் இருந்து உதவி கிடைப்பதை ஊக்குவித்தல் என்பவற்றை நோக்கமாக கொண்டு செயற்படும் இந்த மன்றத்தில் படம் 1 காட்டப்பட்டுள்ள  நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

 

 

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS