மாறி வரும் குடித்தொகை கட்டமைப்பு- இலங்கையின் முன்னிருக்கும் பொன்னான சந்தர்ப்பம்!!
by admin
மார்கழி 21, 2015

ஒட்டுமொத்த குடித்தொகையையும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சிறுவர்கள், உழைக்கும் பிரிவு, முதியவர்கள் என்ற மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். சிறுவர்கள் என்ற பிரிவில் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களையும்  முதியவர்களாக அறுபது வயதுக்கு மேற்பட்டோரையுமே நாம் கருத்தில் கொள்கிறோம். ஏனெனில் இலங்கையில் தனியார் மற்றும் அரச துறையில் ஓய்வு பெறும் வயதெல்லையாக அறுபது வயதே காணப்படுகிறது! சிறுவர்கள் முதியவர்கள் ஆகிய இரண்டு பிரிவும் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்ய முடியாத நிலையில் இருப்பதனால் இவ்விரு பிரிவுகளும் தங்கி வாழ்வோராக கருதப்படுகிறார்கள். மாறி வரும் குடித்தொகையில் இந்த இரண்டு பகுதியினரின் எண்ணிக்கை மாற்றமே நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும்.

உழைக்கும் குடித்தொகை வீதம் தங்கிவாழ்வோர் வீதத்தை விட அதிகமாக காணப்படும் எனில் அது ஒரு நாட்டுக்கு கிடைக்கப்போகும் வரப்பிரசாதம் ஆகும். ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் குடித்தொகையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை மிகச்சரியான முறையில் பயன்படுத்தி வெற்றிகண்ட நிகழ்கால உதாரணங்கள்! அந்த வகையில் இலங்கைக்கு 1992 ஆம் ஆண்டு முக்கியமான இடத்தை பெறுகிறது. காரணம் பொருளாதார அபிவிருத்திக்கு சாதகமான இந்த குடித்தொகை மாற்றம் அதே ஆண்டில் இலங்கையில் ஆரம்பித்தது. இந்த பொன்னான வரப்பிரசாதம் 2037 ஆண்டுகள் வரையே இருக்கும் என்றும் அதன் பின்னர் முதியோர் வீதம் அதிகரித்து தங்கி வாழ்வோர் வீதம் அதிகரித்து விடும் என்றும் ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியமும் (UNFPA) மற்றும் IPS (Institute of  Policy Studies) இணைந்து வெளியிட்ட பதிப்பு தெரிவிக்கிறது.

1

படம்1: தெரிவு செய்யப்பட்ட வயதுக்குழுக்களில் இலங்கையின் குடித்தொகையின் சத வீதப்பகிர்வு

ஆனால் 2011 ஆம் ஆண்டுக்கு பின் படம் ஒன்றில் காட்டப்படுவது போல சிறுவர் எண்ணிக்கை மற்றும் உழைக்கும் குடித்தொகை வீதம் வீழ்ச்சியடையும் அதே வேளை முதியோர் வீதம் அதிகரித்தே செல்லும் அபாயத்தில் இலங்கை பயணிக்க ஆரம்பித்திருக்கிறது என்று புள்ளி விபரவியல் ஆய்வாளர்களும் துறை சார் வல்லுனர்களும் தெரிவிக்கின்றார்கள்.

மருத்துவ வசதிகளில் ஏற்பட்ட முன்னேற்றம், கல்வி அறிவு முன்னேற்றம், பெண்களின் கல்வியறிவு, பெண்களின் திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம் இவைகள் இலங்கையில் பிறப்பு வீதம் குறைந்ததற்கும் சராசரி மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்ததற்கும் முக்கியமான காரணிகளாக அறியப்படுகின்றன.

இலங்கையின் பெரும்பாலான வளங்களையும் , வல்லுனர்களின் கவனத்தையும்  ஒட்டுமொத்தமாக ஈர்த்திருந்த யுத்தத்தில் இருந்தும் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டோடு இலங்கை வெளிவந்து விட்ட நிலையில் இனியாவது பொருளாதார மற்றும் நீடித்து நிலைக்கும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து செயலாற்றுவது அவசியம் ஆகும். குடித்தொகை மாற்றத்தின் சாதகமான இயல்பு ஒட்டுமொத்தமாக நம்மிடம் இருந்து விடை பெற்றுப்போகுமுன் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கவனம் செலுத்தி வளங்களின் உச்ச கட்ட பயன்பாட்டை இலக்காக கொண்டு சகல தரப்பினரும் கைகோர்த்தல் இன்றைய இலங்கையின் அவசியத்தேவையாகும்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம்(UNFPA) இந்த விடயம் தொடர்பாக விழிப்புனர்வூட்டுவத்தையும் சகலதரப்பினரது கருத்துக்களை ஒருங்கிணைப்பதையும் முக்கியமான கடமைகளில் ஒன்றாக கொண்டு செயற்படுகிறது. ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியம், இலங்கை கடந்த மார்கழி 16 ஆம் திகதியன்று பெண்கள், வயதானோர், இளைஞர்கள் என்று மூன்று பகுதியினரையும் ஒருங்கிணைத்து  இந்த  தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பற்றி முதற்கட்ட கலந்துரையாடலை நிகழ்த்தியது. “Generation to generation for our SriLanka” நம் இலங்கைக்காக, சந்ததிகளிருந்து சந்ததிகளுக்கு என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த திறந்த கலந்துரையாடலில் பலரும் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள். துறை சார் வல்லுனர்களான  பிரதான பேச்சாளர்கள் அறுவர் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கலந்துரையாடல் கொள்கை வகுப்பாளர்களுக்கு பொதுமக்கள் மற்றும் துறை சார் வல்லுனர்களிடம் இருந்து கிடைத்த பின்னூட்டங்களுடன்  சிறப்பாக நடந்து முடிந்தது.

2

பிரதான பேச்சாளர்கள்

  1. Professor Mohan Munasinghe, economist and Chairman, Munasinghe Institute of Development
  2. Aaranya Rajasingam, Executive Director – Programme at Viluthu Centre for Human Resource Development
  3. Travis Gomez, economist and Vice President at Frontier Research (Pvt) Ltd
  4. Naushalya Rajapaksha, lawyer and the official youth delegate from Sri Lanka to the United Nations General Assembly
  5. Shyama Salgado, National Programme Coordinator of International Labour Organisation (ILO)
  6. Samantha Liyanawaduge, Executive Director of Help Age Sri Lanka

இலங்கையின் குடித்தொகை கட்டமைப்பு மாற்றம் மற்றும் நீடித்து நிலைக்கும் அபிவிருத்தியில் அதன் தாக்கம் தொடர்பில் உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

COMMENTS ()

admin
SHARE THIS ARTICLE

YOU MAY ALSO LIKE > <

COMMENTS